பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

342



பொதுத் தொண்டு என்று மகுடமிட்டுப் பெரியார் தமது பிறந்தநாள் செய்தியினை அருளினார்: - மனிதனாகப் பிறந்தவன் உயிர் வாழ்வதற்காக உணவு தேடுகிறான். உண்டபின் ஓய்வுக்காக உறங்குகிறான். பிறகு காம உணர்ச்சிக்குப் பரிகாரம் தேடுகிறான் அதனால் பெண்டாட்டி பிள்ளை குட்டி உண்டாகி விடுகிறது. இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சட்டமாகி விடுகிறது. அதில் பொதுத் தொண்டும் ஒரு காரியமாகி விடுகிறது.

பொதுத் தொண்டை ஒரு தொழிலாகக் கொள்பவரிடத்தில் நேர்மை ஒழுக்கம் நாணயம் இருக்க முடிவதில்லை. நீதிமன்றம், சிறைக்கூடம், பத்திரிகைத் துறை, ஜனநாயகம், கடவுள் தன்மை ஆகியவை எப்படியாவது மனிதன் தன்னை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளாகிவிட்டன. யோக்கியமான பொதுத் தொண்டு நிறுவனங்கள் இல்லாமற் போனதால், நடத்திச் செல்ல நல்ல தலைவர்களும் உண்டாவதில்லை. தன்னலத்தை வெறுத்த பொதுத் தொண்டன் என யாரையும் அடையாளம் காட்ட முடிவதில்லை. அதனால்தான் சுயநலமற்ற பொதுத் தொண்டன் - நான்கூட ஆகமாட்டேன். எனக்கும்கூட ஒரு மாதிரியான சுயநலம் இருக்கின்றது, அது என்ன சுயநலம்? இளமை முதல் இருந்து வரும் என் இயல்பின்படி, நிறைய சொத்துச் சம்பாதித்திருக்கின்றேன். 15 லட்ச ரூபாய் மதிப்பிடலாம். அதில் பெருமளவு நல்ல பொதுத் தொண்டுக்கு உதவுகிறது. எனக்குச் சொந்தமான செல்வ வசதிகள் இருந்தும், என் வாழ்வு சராசரி மனிதனுடைய வாழ்வுதான். உணவுச் செலவு மாதம் 50ரூ.; உடைச் செலவு 50ரூ. ஆண்டுக்கு ஆகலாம். மாதம் 200ரூ. சம்பளத்தில் ஆட்கள் அமர்த்தாமல், அவர்கள் செய்கின்ற வேலையைச் செய்கிறவர், என் மனைவியாக இருக்கிறார். அந்த அம்மாளுக்கும் மாதம் உணவு ரூ.50க்குள்; உடை ஆண்டுக்கு ரூ.150க்குள்; எங்களுக்குப் பல செலவுகள். போகிற இடங்களில் ஓசி பிரயாணம், ஒரு லாரி சாமானுடன், மோட்டாரில், இரவில் மாதம் சராசரி 20 நாள் சுற்றுப் பயணம். சதா கழக வேலை, கட்டடவேலை, கழகச் செல்வத்தைப் பெருக்கிடும் வேலை, கணக்கு வைக்காமல் டயரிலேயே குறித்துச் கொள்ளும் வேலை/ சில பொறாமைக்காரர். வெந்து புழுங்குவோர் தவிர, மற்றவர்களால்... நான் வெட்கப்படும் அளவுக்குப் போற்றுதல், புகழுதல், அன்பு காட்டுதல் இவற்றை நான் அனுபவிக்கிறேன் அல்லவா! இவைதான் எனக்குச் சுயநலம்

ஒரு பத்து ஆண்டுகளுக்காவது காமராசர் ஆட்சி நீடித்தால் திராவிடர் கழக இலட்சிய வேலை பெரும் அளவுக்குப் பூர்த்தியாகும். ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிலும் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய வேலைத் திட்டம் அறிவிப்பது என் வழக்கம். அவ்வாறு