பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

361


உச்சவரம்பு நிலச்சட்டம் செல்லாதென, நிலச்சொந்தக்காரர் சிலரது ஆட்சேபணையில் தீர்ப்பு வழங்கியது. 9.3.64 அன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்ட அரசியல் சட்டம் 14-ஆவது பிரிவுக்கு இந்தச்சட்டம் முரணானதாம்! சிலிர்த்தெழுந்தார் பெரியார்! “தயாராகி விட்டோம்” என்று சூளுரைத்தார்! “நில உச்சவரம்புச் சட்டம் செல்லாதாமே?" என்று கெக்கலித்தார். நீதிமன்ற அநீதிகளைப் பட்டியலிட்டு, நிரல்படக் காண்பித்தார். ஆர்.எஸ் மலையப்பன் என்ற கலெக்கடர் மீது குற்றம் சுமத்திய தீர்ப்பு; அழகர்சாமி அரசு வக்கீலாக நியமிக்கப்பட அக்ரகார எதிர்ப்பு; வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாதென்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; மைசூர் அரசின் பிற்படுத்தப்பட்டடோர் இட ஒதுக்கீடு செல்லாதென்ற தீர்ப்பு - ஆந்திர பஸ்ரூட் வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு - ஆகியவை இந்தச் சந்தர்ப்பத்தில் பெரியாரால் அழகுடன் எடுத்துக் காட்டப்பட்ட பாங்கு, பாராட்டத்தக்கதாயிருந்தது.

14.3.64 அன்று கரூரில், சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் பொதுக் கூட்டம் கே.எஸ். ராமசாமி தலைமையில், பெரியாருடன், வீரமணி, ஆனைமுத்து இருவரும் பேசினர். 29.3.64 எல்லா ஊரிலும் கண்டன நாள் கொண்டாடுமாறு. முதலில் அறிக்கை வெளியிட்டுப், பின்னர் ஏப்ரல் 19-ஆம் நாள் என்று மாற்றிப் பெரியார் 20.3.64 அன்று திருத்தம் வெளியிட்டார். மார்ச் 15 திருவாரூர், 17 தஞ்சை, 18 கடலூர் சிதம்பரம், 19 சேலம், 20 திருச்சி, 21 நெல்லை, 22 மதுரை, 23 கோவை, 24 நாகர்கோயில் - என்று தமிழ் நாட்டில்' பரந்த அளவில் உடனடியாகச் சுற்றுப் பயணம் செய்து, பெரியார் இந்த நீதிப்போக்கினைக் கண்டித்து முழக்கமிட்டார்! மற்ற ஊர்களிலும் 19.4.64 அன்று பொதுக் கூட்டம் நடத்தி, உச்சநீதி மன்றத் தீர்ப்பின் பாதகத்தை விளக்கி, இந்தத் தீர்ப்பு நீதியற்றது; உள் எண்ணம் உடையது: வெறுக்கத் தக்கது என்று தீர்மானம் நிறைவேற்றி, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி, ஜனாதிபதி, பிரதமர், “விடுதலை“ அலுவலகம் எல்லாருக்கும் அனுப்ப வேண்டும் என்று அறிவித்தார் பெரியார். “தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றம் நிறைவேற்றிய, மந்திரி சபை முடிவான, இந்த உச்சவரம்புச் சட்டத்தை, ஓர் அன்னக்காவடிப் பார்ப்பான் மகன். யாரையோ கெஞ்சி, எப்படியோ பதவிக்கு வந்தவன், மாற்றி விடுவதா? ஜனாதிபதியை, கவர்னரை, பிரதமரை, மந்திரிகளைக் கண்டிக்கிற போது - இந்த ஜட்ஜ்களை நாங்கள் கண்டிக்கக் கூடாதா? பிறகு என்ன சுதந்திரம் வேண்டியிருக்கிறது நமக்கு? எனக்கு உள்ள பிரச்சினை எல்லாம் பார்ப்பான் ஜட்ஜாக வரக் கூடாது என்பது தான்! இந்த சுப்ரீம் கோர்ட் ஏற்பட்ட 1950 முதல் இந்த 1964 வரை ஒரு தமிழன் அங்கு ஜட்ஜாக நியமிக்கப்பட்டதுண்டா ?” - என்று பதில் பகர முடியாத கேள்விகளைக் கணைகளாகத் தொடுத்தார் பெரியார்!