பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

363


சென்ற போது, அதே ஐகோர்ட்டின் பார்ப்பனரல்லாத நீதிபதி இருவர் அரசு ஆணை செல்லும் என்று தீர்ப்புக் கூறினார்கள். ஒரே ஐகோர்டில் ஆளைப் பொறுத்து நீதி மாறுபடும் விசித்திரத்தை, “இதோ கேரளா உதாரணம்” என்ற தலையங்கத்தின் வாயிலாக, 8.4.64 “விடுதலை” எடுத்துக் காட்டியது. அன்றே, சுப்ரீம் கோர்ட் கண்டன நாள் கொண்டாடும் போது, நிறைவேற்றப்படும் தீர்மான வடிவம், ஒரு நமூனா அமைப்பில், விளக்கமாகத் தரப்பட்டுமிருந்தது.

யானை வேட்டைக்குத்தானே நாம் செல்கிறோம் என்பதால், வழியில் எதிர்ப்படும் நரிகளை விட்டு வைப்பதில்லை பெரியார்; ஆதரவின்றிக் கிடக்கும் ஆடுகளைத் தூக்கிவிடவும் தவறுவதில்லை ! அண்ணாமலை யூனிவர்சிட்டியில் பார்ப்பனர் ஆதிக்கம் என்ற தலையங்கத்தில் 6.4.64 அன்று, சர்.சி.பி. ராமசாமி அய்யரின் ஆணவ அட்டகாசங்களைக் குறிப்பிட்டுக் ‘காமராசர் போன பின்பு, பார்ப்பனர்க்குத் தைரியமும் துணிவும் ஏற்பட்டுவிட்டது. செட்டி நாட்டரசர் இதில் உடனே தலையிட வேண்டும். பார்ப்பனரல்லா மாணாக்கர்க்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என எழுதினார் பெரியார். “மாயூரம் வட்ட தி.க. தலைவர் சவுரிராசன், திருவிளையாட்டம் என்ற தம் ஊரில் தமது சொத்தெல்லாம் செலவழித்து நடத்தி வரும் உயர்நிலைப் பள்ளியை நானே பார்த்திருக்கிறேன். அதைச் சீர்திருத்த, நன்கொடையாக ரூ.200/- இப்போது நானும் தந்திருக்கிறேன். தோழர்களும் உதவிட வேண்டுகிறேன்” என்று பெரியார் கனிவுரை நல்கினார். 11.4.64 “விடுதலை” யில் வில்லிவாக்கத்தில் ஏப்ரல் 11-ஆம் நாள், குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டை சம்பத் திறந்து வைத்தார். இரவு, குலதெய்வம் ராஜகோபால் ‘நாலுந் தெரிந்தவன்’ நாடகம் நடத்தினார். மறுநாள் திராவிடர் கழக மாநாட்டையொட்டித், தலைவரான பெரியாரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். வீரமணி திறப்பாளர், இரவு கண்ணதாசனின் ‘கோணிப் புளுகன் கோயபெல்ஸ்’ நாடகம்!

அருப்புக்கோட்டை இடைத்தேர்தலில் பேசிய ராஜாஜி “காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும். அதுவும் செருப்படிபோல் விழவேண்டும்” என்று பேசியிருந்தார். “இவருக்கு என்ன, பைத்தியம் பிடித்துள்ளதா?“ என்று கேட்டு, ‘செங்கான் கடையில் ஆச்சாரியார்’ எனும் மகுடமிட்ட தலையங்கத்தை, 14.4.64 ”விடுதலை" பூண்டிருந்தது.

மிக்க எழுச்சியுடன் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் திருவல்லிக்கேணி கடற்கரையில் 19-ந்தேதி குழுமியிருந்தனர். ‘சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் ஆகிய இரண்டுமே அரசு நிர்வாகத்தில் எப்போதும் தலையிடாதவாறு, இனி வரும் 17-ஆவது திருத்தம் அமைந்து, அரசியல் சட்டத்தில் இடம்பெற வேண்டும்’ என்று பெரியார்