பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அழுத்தமாக உரைத்தார். இந்தச் சொற்பொழிவில் பார்ப்பனர் எதற்கும் துணிந்தவர் எவ்வளவு உயரப் பறந்தாலும் ஊர்க் குருவிதால் பருந்தாகாது' என்ற உண்மை ஒன்றை - மர்மமான விஷயம் ஒன்றைப் பெரியார் திடீரென்று அம்பலப்படுத்தி, மக்களை அதிசயக் கடலில் அமிழ்த்தினார். சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதிப் பார்ப்பனர், பொய்யான வயதைக் கொடுத்துப், பதவி நீடிப்புப் பெற்றுள்ள உண்மையே அது அவர் கொடுத்துள்ள வயதின்படி, அவர் தம்பியைவிட அவர் இளையவராகிறார்! இந்தக் கூட்டத்தில் பெரியார் இரு குழந்தைகளுக்குக் காமராஜ் என்று பெயர் சூட்டினார்! 19.4,64 நாடெங்கும் சுப்ரீம் கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் கொண்டாடிய விவரம், அடுத்த ஒரு மாதம் வரையில் தொடர்ந்து “விடுதலை”ஏட்டில் வெளிவந்தது! தனிப்பட்டோர் பலரும் எதிர்த்துக் குரலெழுப்பிய பட்டியலும் இடம் பெற்று வந்தது!

தமது 74-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏழு நாட்களே எஞ்சியிருந்த நிலையில் ஏப்ரல் 22-ஆம் நாள் புதுவைக்குயில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - கனகசுப்புரத்தினக் கவிஞர் கோமான் - இயற்கை எய்தினார். காலை 8-30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவ மனையிலிருந்து, அன்னாரது சடலம் புதுவைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மகனார் மன்னர் மன்னனால் எரியூட்டப் பெற்றது. சாகா இலக்கியத்துச் சகாப்தம் படைத்த புதுமைப் பாவேந்தனுக்குப் புதுவை அரசு பெருமையூட்டிற்று, பின்னாளில்!

இராமாயணக் குறிப்புகள் என்ற தலைப்புடன் ஏப்ரல் முதல் அக்டோபர் திங்கள் வரை நாள்தோறும் வெவ்வேறு விவரங்களுடன், வான்மீகன், கம்பன் புரட்டுகள் “விடுதலை” முதல் பக்கத்தில், பெட்டிச் செய்தியாக, 178 துணுக்குகள் பிரசுரமாயின், பின்னர் இது நூலாகவே தொகுக்கப் பெற்றது. திருச்சியிலுள்ள சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தும் பல்வேறு பள்ளிகளுக்கான விளம்பரங்கள் தினமும் “விடுதலை”யில் இடம்பெற்று வந்தன. கம்யூனிஸ்டுக் கட்சி இந்தியாவில் இரண்டாகப் பிளந்தது. பார்ப்பனத் தலைமையுடன் இடது சாரிக் கட்சி உதயமாகிவிட்டது. தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் ‘தமிழ்ச் செய்தி’ என்ற தினசரிப் பத்திரிகை ஒன்றினை சம்பத் தொடங்கினார். இதன் ஆரம்பவிழா சென்னை பெரியார் திடல் ராதா மன்றத்தில், ஏ.எல். சீனிவாசன் தலைமையில் காமராசரால் நிகழ்த்தப் பெற்றது. மணலி கந்தசாமி, உமாபதி, சின்ன அண்ணாமலை, பாலதண்டாயுதம், ஜெயகாந்தன், கே. ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரைத்தவர்கள். மே 24-ஆம் நாள் இது தொடங்கப் பெற்றது.


பெரிய நகரங்களில் மட்டுமே மாநாடு நடத்தி வந்த மரபினை மாற்றத்தான் பெரியார் வில்லிவாக்கத்தில் இரு மாநாடுகள் நடத்திக் காட்டினார். இது கூடச் சென்னை மாநகருக்கு அருகே இருக்கிறது!