பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

365


ஆனால் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்கும் திருத்துறைப் பூண்டிக்கும் இடையிலுள்ள மிகச் சிறிய கிராமமாகிய கச்சணம் என்ற மாரில், 26.4.64 அன்று, 50 காசு கட்டணத்துடன், திராவிடர் கழக மாநாட்டை நடத்திக் காட்டினார் பெரியார். வரவேற்புக் குழுத் தலைவராக வி.கணபதியும் செயலாளராக சு.சாந்தனும் இருந்தனர். மே மாதத்தில் பெரியார் சுற்றுப்பயணம் செல்லவில்லை . 24-ந் தேதியன்றுதான் தொடங்கினார். இடையில் திருச்சியில் புதிய பணி ஒன்றைத் துவக்கினார்.

‘சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு ஈ.வெ.ரா. அறிவிப்பு’ என ஒன்று, மே ஏழாம் நாள் “விடுதலை”யில் காணப்பட்டது. “திருச்சியில் வே.ஆனைமுத்து நிர்வாகியாக இருந்து 30 நாள் பயிற்சி தந்து, பகுத்தறிவுப் பிரச்சாரப் படை ஒன்றினை உருவாக்கப்படும்; அறிவு, ஒழுக்கம் நாணயம் உள்ள தோழர்கள் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்" என்று பெரியார் வேண்டுகோள் விடுத்தார். இது பின்னர் ஜூன் திங்கள் 15-ஆம் நாளிலிருந்து செயல்பட்டது.

இதற்கிடையில் காரைக்கால் பகுதியிலுள்ள அம்பகரத்தூர் என்ற சிற்றூரில் காளிகோயில் ஒன்றில் எருமைக்கடா பலி கொடுக்கும் வழக்கம் இன்றும் நடைபெற்று வருவதைக் காரை சி.மு. சிவம் போன்ற தோழர்கள் சுட்டிக்காட்டி, இந்த பலியைத் தடுக்கக் கழகத்தின் சார்பில் முயற்சி எடுக்க விரும்பினர். அதனால் 21-ந் தேதியன்று மூடநம்பிக்கைத் தடுப்பு பற்றிப் பெரியார் அறிக்கை வெளிவந்து விட்டது. சென்னையிலிருந்து வீரமணியும், ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் அவர்களும் காரைக்கால் பகுதிக்குச் சென்றனர். பிரச்சினை வலிவு பெற்று விட்டது. கழகத் தோழர்கள் அங்கே குவிந்தனர். காரைக்கால் நிர்வாக அதிகாரி முன்வந்து. இதை அடியோடு நிறுத்துவற்கு இப்போது காலம் போதாது; இந்த ஆண்டு ஒரே ஒரு எருமைக்கடா பலியோடு நிறுத்துகிறோம். அடுத்த ஆண்டு முதல் அடியோடு பலியை ஒழித்து விடுகிறோம் என உறுதி கூறவே, 26-ந்தேதி, அந்த விழா சிறப்புக்குன்றி, நடந்து முடிந்தது.

ஆனால் 1964 மே 27-ஆம் நாள் ஆசிய ஜோதியே அணைந்து போய்விட்டது. பிற்பகல் 2.30 மணிக்குப் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் காலமாகி விட்டார்கள். செய்தி கேட்ட மனித குலமே கதறியழுதது. பூவும் (ரோஜா) அழுதது. புவியே அழுதது. தர்மபுரி மாவட்டத்திலிருந்த பெரியார், தமது தாள முடியாது துயரச் செய்தியைத் தொலைபேசி வழியே தெரிவிக்கச் செய்தார். சமதர்மச் சிற்பி நேருவின் மறைவால் காங்கிரசுக்குத் தலைமையே போய் விட்டது. காமராசர் இருக்கிறார் என்றாலும், நேருவைப் போல், உலகம் சுற்றிய மேதாவிலாசம் குறைவுதானே? என்று பெரியார் அங்கலாய்த்தார்.