பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

36


ஈடுபட்டு மிகத் தேர்ந்த வணிகரானார். ஈரோட்டில் நாயக்கர் என்றால் அவர்தாம்; நாயக்கர் மண்டி என்றால் வெங்கட்ட நாயக்கரின் மண்டிக் கடைதான்; நாயக்கம்மாள் என்றால் சின்னத்தாயம்மாள்தான் என்று நாடெங்கும் அறிமுகம் கிடைத்தது.

கூலிக்காரராய் வாழ்வு தொடங்கிய நாயக்கர் ஊழையும் உப்பக்கம் காண்பவராய், உலைவின்றித் தாழாது உஞற்றிக், குன்றெனச் செல்வந் திரட்டி, வணிக வேந்தராய் விளங்கினார். பொருள் குளிர் திட்டால் புகழ் பெருகும்; தான தர்மங்கள் பெருகும்; நட்பும் சுற்றமும் நயந்து சூழும்; வீடு மாளிகையாகும்; மாளிகை சத்திரமாகும்; சத்திரத்தில் சாப்பாடு பெருகும்; அந்தஸ்து வளரும்; ஆதரவு நாடுவோர் அலை அலையாய் வருவர்; பக்தி, பெருகும்; பாகவதர்கள் வருவர்; வீடே பஜனை மடமாய் மாறும்! இதெல்லாம் நாட்டு வழக்கந்தானே? நாயக்கர் மட்டும் விதி விலக்கா? பரம பாகவத சிரோமணியானார்; வைணவ சித்தாந்த வள்ளலும் ஆனார் வெங்கட்ட நாயக்கர். அறப்பணியும் திருப்பணியும் அளவு கடந்து செய்தும் தேவைப்பட்ட சிறப்புக் கிடைக்கவில்லை நாயக்கருக்கு! காரணம், திருமணமாகிப் பத்தாண்டுகள் கழிந்தும், சின்னத்தாயம்மாள் இன்னும் தாயாகவில்லையே! பக்தியும் விரதமும் நோன்பும் சிரத்தையும் பெருகின! தொடர்ந்தன!

வைணவ குலதிலகமாம் நாயக்கர் மனம் மகிழ (இரண்டு மூன்று பிள்ளைகள், பிறந்தவுடன் இறந்து போயினும்) கடைசியில், 1877- செப்டம்பர் 28-ஆம் நாளில் கிருஷ்ணசாமியும் 1879- செப்டம்பர் 17-ஆம் நாளில் இராமசாமியும் 1881-ல் பொன்னுத்தாயம்மாளும் 1891-ல் கண்ணம்மாளும் மக்களாய்ப் பிறந்தனர். நாயக்கர் மக்கள், நாடுபோற்றும் நன்மக்களாய்த் திகழ்ந்து, மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனுஞ் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தனர். ஆளுக்கொரு துறையில் புகழீட்டினர். எனினும், ஈரோடு வெங்கட்ட நாயக்கரின் இளைய புதல்வன் இராமசாமி, உலகமே கண்டறியாத ஒப்புயர்வற்ற சிந்தனைச் சுரங்கமாய், அறிவுச் சிகரமாய்க், கருத்துக் கருவூலமாய், எண்ணப் பெருங்கடலாய் எழுந்து நிமிர்ந்து உயர்ந்து ஓங்கிநின்ற பேருண்மை வரலாற்றினை, முறையோடு காண்போம்.

பெரியார் பிறந்தார், 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் அன்று! ஆம்!