பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்து நிலைமை இதுதான்! தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்கள் தலைநிமிர, அவர்களைக் கைதூக்கி விட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கவலைகளைக் களைந்திடத் தனிப்பட்டவர்களோ அமைப்புகளோ இல்லவேயில்லை. சமரச சன்மார்க்கம் காண முயன்ற வடலூர் இராமலிங்க அடிகளார்க்குத் தமிழகத்திலேயே போதிய வரவேற்புக் கிட்டிடவில்லை. கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக; நால்வருணம் ஆசிரமம் ஆசார முதலா நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே, சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பே, என்ற அடிகளின் புதிய கருத்துகளை, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தமிழ் மக்களிடம் வளரவில்லை. மாறாக, அரைத்த மாவையே அரைத்திடும் போக்கில், வழக்கத்தால் செக்கைச் சுற்றிவரும் மாடுகள் போல், பழைய கருத்துகளையே, தத்தம் மொழியில், புதியனபோல் புகுத்திய பலரைத், தமிழகத்தார் விரும்பி விரைந்து ஏற்றனர்! இராமலிங்கருக்குக் கிடைக்காத ஆதரவு அவர் காலத்தில் வாழ்ந்த வடநாட்டு இராமகிருஷ்ணருக்கு இங்கே கிடைத்தது, என்ற வரலாறு இதற்கு உரிய மிகச் சரியான எடுத்துக் காட்டாகும்!

தண்டமிழ் இனத்தார், தம் பண்டைப் பெருமையெல்லாம் மறந்தும் துறந்தும், நிரந்தரமாய் அடிமைப்பட்டுச் சுதந்திரத்தைப் பெறவும் முனையமாட்டார்களோ என்ற மிகப் பெரிய வினாக்குறியாய் வெடித்தெழுந்து தமிழர் நிலை அறைகூவல் எழுப்பிக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் - தமிழகத்தின் எழுஞாயிறாய், இருள் துடைக்க அருள் சுரந்து, பிறந்தார் நம் தந்தை பெரியார்!

பழந்தமிழ் மக்களால் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டுத் தமிழகத்தின் மேற்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்துள்ள நாட்டின் ஒரு பகுதியே இன்றையக் கோயமுத்தூர் மாவட்டம். அங்குள்ள ஈரோடு பெருநகரம் வணிகச் சிறப்புடையதாகும். பெரிய தொடர் வண்டிச் சந்திப்பும் ஆகும். வீட்டில் கன்னட மொழி பேசும் பலிஜ நாயக்கர் வகுப்பினைச் சார்ந்த வெங்கட்ட நாயக்கர், தம் மனைவி சின்னத்தாயம்மாளுடன், அன்றாடம் கூலி வேலை செய்து, பிழைப்பினை நடத்தி வந்தார். உழைப்பின் மேன்மையினை உணர்ந்திருந்த காரணத்தால், பின்னர், வண்டி, மாடுகள் வாங்கி, அவற்றின் வாயிலாக வருவாய்ப் பெருக்கம் தேடினார். நாள்தோறும், ஓய்வின்றி, அரிதின் முயன்று, தம் மனையாளின் அருந்துணையுடன், சிறு மளிகைக்கடை ஒன்றினை வண்டிப்பேட்டையில் துவக்கிய வெங்கட்ட நாயக்கர், தமது நாணயத்தாலும் நாநயத்தாலும், பெரும் மண்டிக்கடையின் உரிமையாளராக, விரைவில் மாறினார். பொருட்களை மொத்தமாகக் கொள்முதலும் விற்பனையும் செய்வதில்