பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

34


கிறித்துவர்களும் தமிழர்களிடையே தத்தம் மதக் கருத்துகளைப் புகட்டிடத் துவங்கினர். வந்தாரையெல்லாம் வாழவைத்தும், மதம் தந்தாரையெல்லாம் வழிகாட்டிகளாய் மதித்தும் தமிழகத்து மக்கள் தமக்குள் ஆயிரம் சாதிகளாய்ப் பிளவுபட்டுக் கட்டுக்குலைந்தனர். தமிழ்மொழியில் தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் பல சொற்கள் விரவி, ஏற்கனவே வடமொழியின் இடைச் செருகலால் தனித்தன்மை குன்றியிருந்த தமிழ்மொழியை மேலும் நோயாளி ஆக்கின.

பிரிட்டிஷ் ஆட்சி இரண்டு நூற்றாண்டுகள் நிலவியிருந்தது. சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள்தான் ஒரே நாடு எனப் பிரகடனப்படுத்தினர். மொழி, கலாச்சார வேற்றுமைகளால், மாறுப்பட்ட பண்பாடுகளால், பல்லாண்டுகளாய்த் தனித்தனி நாடுகளாய் விளங்கியவற்றையெல்லாம் வெள்ளையர், தம் துப்பாக்கி முனையால் ஒன்றுபடுத்திய பாவனையை உண்டாக்கினர். ஆங்கிலம் ஆட்சி மொழியாகியது. கல்விக் கூடங்கள், நீதி மன்றங்களில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியது. இந்தியரின் மதச் சுதந்திரங்களில் தலையிடுவதில்லையென பிரிட்டிஷ் அரசு உறுதி கூறிவிட்டது.

பாமர மக்கள் நலனுக்கென ஆங்கில அரசு பல புதிய திட்டங்களை விஞ்ஞான அடிப்படையில் புகுத்தியும் அவற்றை அனைவரும் அனுபவிக்க இயலவில்லை. சாதி மதங்களின் பேராலும், கடவுள் சம்பிரதாயங்களின் பேராலும், பாமரனின் வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வந்தன. மனுதர்மம் போன்ற ஸ்மிருதிகளின் அடிப்படையில் அமைந்த இந்துச் சட்டம் ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கிற்று. யாரால் எப்போது உண்டாக்கப்பட்டது? மதமா - அல்லது பல மதங்களின் கூட்டா? இது ஒரே மதமானால் ஏன் முரண்பட்ட பல்வேறு உட்கிளைகள்? சைவ, வைணவப் பெரும் பிரிவும்; பல்வேறு உபபிரிவுகளும்; அவற்றுக்கிடையே ஓயாத போரும் எதனால்? கோடிக் கணக்கில் கடவுளரும் கதைகளும் கற்பனைகளும் மலிந்து காணப்படுவது எவ்வாறு? - என்று விடை காண ஒண்ணாத பல்நூறு வினாக்கள் தொடுக்கக் காரணமாயுள்ள இந்துமதம், தமிழர்களின் வாழ்க்கையினூடே புகுந்து ஒற்றுமை குலைத்துச் சின்னாபின்னமாகச் சிதறடித்தது!

அடிமை வாழ்வில் சுகங்காண ஆரம்பித்தனர் தமிழ் மக்கள். அரசியலில் ஆங்கிலேயனுக்கு அடிமை; பொருளாதாரத்தில் ஜமீன் மிட்டா மிராசு வணிகர்க்கு அடிமை; சமுதாயத்தில் புரோகிதர்க்கு அடிமை! மொழித்துறையில் ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் அடிமை! கலைத்துறையில் புராண இதிகாசங்களுக்கு அடிமை! சாதி அமைப்பில் வர்ணாசிரமத்துக்கு அடிமை!