பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



கிரேக்கக் கடவுள்களைப் போலவே உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்களைக் கடவுளாக வணங்கும் இழிவான நிலைக்கு இறங்கினர் மக்கள்.

வைதிக மதங்களான சைவம், வைணவம் இரண்டின் செல்வாக்கினால் உந்தப்பட்ட பல்லவ அரசர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தனர்: இவர்கள் ஆளுகையில் சிற்பக்கலை வளர்ந்தது; கோயில்கள் பெருகின; சமண பவுத்த மதங்களை அடியோடு அழித்திட இவர்கள், தமிழ் மூவேந்தர்களின் ஒத்துழைப்பும் பெற்றனர்; பாமர மக்களிடையே பக்தி மார்க்கத்தைப் பரப்ப இசைத் தமிழ் பெரிதும் உதவியது! (பவுத்தமும் சமணமும் மதங்களல்ல; கொள்கைகளே என்பது பெரியார் கருத்து).

புராணக் கருத்துக்கள் தடையின்றிப் புகுத்தப்பட்டன; வடமொழிச் சொற்கள் தமிழில் ஏராளம் கலந்தன. தனித்தமிழின் திண்மை சிதைந்தது; நெகிழ்ச்சியும் தளர்ச்சியும் ஏற்பட்டு, எளிமை இனிமை என்ற முலாம் பூசப்பட்டது. இசையோடு குழைத்து, ஆகா நெறிகளை நுழையவிட்டனர். தமிழ் மக்களிடையே மத நம்பிக்கைகள் வெறிகளாய் மாறின. சாதிச் சழக்குகள் தோன்றின. மனுதர்மம் மர்மப் புன்னகை பூத்தது. மூடக் கருத்துகள் முளைவிட்டன. மவுடிகம் காரிருளாய்க் கவிந்தது.

தமிழகத்தில் மீண்டும் சோழப் பேரரசு தலை தூக்கியது. அரசர்கள் மதச் சார்புடையவர்களாக விளங்கியதால் பெருங் கோயில்களை எழுப்பினர். கோயில்களைச் சார்ந்து வாழும் புரோகிதர், அருச்சகர், இசைவாணர், தேவதாசியர் முதலிய சாதிகள் தோன்றிப் பரவிப் பெருகி வந்தன. மானியங்கள், தானதருமங்கள் வரையின்றி வழங்கப்பட்டன. தமிழ் நாட்டில் வடமொழியின் ஆதிக்கம் தலை விரித்து ஆடியது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் பக்குவமாய் ஊடுருவி மக்களின் அறிவுப் பெருக்கத்துக்கு அணை போட்டுவிட்டன. சிந்தனா சக்தியும், தர்க்கத் திறமையும் அற்றவர்களாய்த் தமிழ் மக்கள் ஆக்கப்பட்டனர்.

இதுவரையில் ஆண்டுவந்த தமிழ்மரபு மன்னர்களின ஆட்சிக்கும் தமிழகத்தில் முடிவு நேரிட்டது. நாயக்கர்களும், மராட்டியர்களும், முஸ்லிம்களும், வெள்ளைக்காரர்களும் தொடர்ந்து ஆட்சிபீடத்தில் அமர்ந்தனர். இவர்களுக்கு நாடு-மொழி-மக்கள்-மீது உண்மையான பற்றுதல் ஏற்பட வழியில்லாமல் போயிற்று. மக்கள் போகும் போக்கிலேயே விட்டு, அவர்களது மத சுதந்திரங்களில் தலையிடாததுபோல் நடித்து - ஆனால் உண்மையில் மதமாற்றங்களிலும் ஈடுபட்டுக், குழப்ப நிலையில் தமிழகத்தை ஆழ்த்தினர். சைவ, வைணவர்கள் கலை இலக்கியங்களின் வழியே மத நம்பிக்கைகளைப் புகட்டியது போன்றே, இஸ்லாமியர்களும்