பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெரியாரிசம் பொங்கல்மலர் கட்டுரையில், சமதர்மத் திட்டம் என்றால் எல்லா மக்களுக்கும், ஒன்று போல, ஒரே நேரத்தில் புகுத்தப்பட வேண்டும், என்று கருத்தறிவித்தார் பெரியார்.

16.1.65 அன்று சிதம்பரத்தில், பெரியாரின் நாய் காணாமல் போய், “விடுதலை”யில் அறிக்கை வெளியிடப்பட்டது. டேஷ் ஹவுண்ட் இனத்தைச் சேர்ந்த 6 வயதுள்ள டிட்டோ அல்லது மாதோர் என்ற பெயருடையது அது. சீர்காழித் தோழர்கள் மூலமாக ஒரு வாரத்திற்குள் அது திரும்பக் கிடைத்த பின்னரே பெரியாருக்குத் திருப்தி! 17ந் தேதி பெரியார் விழுப்புரத்தில் பேசும்போது, இந்தித் திணிக்கும் பிரச்சினைக்கே இப்போது இடமில்லை - என்று குறிப்பிட்டதைப், பெரியார் இந்தியை எதிர்க்கவில்லை என்ற பொருள்பட, “இந்தியன் எக்ஸ்பிரஸ்” மிகஅவசரமாகச் செய்தி வெளியிடவும், 19-ந் தேதி “விடுதலை”யில் அந்தச் செய்தியை அப்படியே வெளியிட்டுத் தாம் பேசியதையும் குறிப்பிட்டு, “இப்படித் திசை திருப்புவது அசல் அக்கிரகாரத்தனமல்லவா?” என்று பெரியார் கேட்டார்.

26.1.1965 அன்று இந்தி அரியணை ஏறும் நாள் ஆட்சி மொழி என்கிற அந்தஸ்து பெறும் நாள், அது. நமக்குத் துக்க நாள். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் தங்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி பறக்க விடுங்கள், சுமார் 1,000 ஊர்களில் மட்டும் நமது எதிர்ப்பினைக் காட்டினால் போதும் என்று அண்ணா கூறியிருந்தார். இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாணவர் நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, 25ந் தேதியே மறியல் செய்வதாக மாணவர் தீர்மானித்திருந்தார்கள். சென்னையிலும் மதுரையிலும் மாணவத் தலைவர்கள் அரசியல் சட்ட மொழிப் பிரிவுக்குத் தீ வைத்தார்கள். ஆறு பேர் தீக்குளித்தும் இரண்ட பேர் நஞ்சருந்தியும் தமிழகத்தில் இந்தியை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்தார்கள், உலக வரலாற்றில், மொழி காக்கும் போரில், இவ்வளவு அதிக விலை தரப்பட்டதில்லை !

‘தமிழ் தாழவும், தரங்கெட்ட இந்தி ஆளவும், தருக்கர் தர்பார் ஆணையிடுகிறது. உன் கண் எதிரே கன்னித் தமிழுக்கு ஆபத்து சூழ்கிறது’ என்று “முரசொலி”எழுதியதையும் ராஜாஜி, 'இந்தியால் தமிழ் கெடாது என்று முரண்பாடாக எழுதியதையும், “விடுதலை” எடுத்துக் காட்டியதோடு, 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாட்களும் தொடர்ந்து, “இந்தி எதிர்ப்பல்ல; காங்கிரஸ் எதிர்ப்பே !“ என்று தலையங்கமும் தீட்டியது. 25-ந் தேதி பெரியாரே, “பண்டிதர்களே! என்னைக் காயாதீர்கள், திருந்துங்கள்!” என்று ஒரு தலையங்கக் கட்டுரை தீட்டி, பாரதி பாடலில் “மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற பகுதியைத் தமக்கு ஆதரவாக்கியிருந்தார். அப்பாவி மாணவரைத்