பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
2. வளர்ந்தார்
பள்ளிப் படிப்பு – துள்ளித் திரியும் துடுக்கு - மாணவப் பருவத்தில் வாணிகம் புரிந்தார் - 19 பிராயம் வரை 1879 முதல் 1898 முடிய.

கோவை மாவட்டத்தின் பெருங்குடி மக்களாகிய கொங்கு வேளாளர் சமூகத்திடையே, செல்வாக்கும் நல்ல மரியாதையும் பெற்றுத் திகழ்ந்தார் வெங்கட்ட நாயக்கர். பல அறக்கட்டளைகள், கல்விச் சாலைகள், மருத்துவ நிலையங்கள் நிறுவினார். திரண்ட செல்வத்தில் புரண்டெழுந்த போதிலும், பக்தி மார்க்கத்தைப் பரப்புவதை மறப்பதில்லை. வீட்டில் எந்த நேரமும் புராண கதாகாலட்சேபங்கள், பஜனைப் பாடல்கள், வைணவ சமயத் தத்துவ விசாரணைகள் இத்யாதி, இத்யாதி....

கிருஷ்ணசாமியும் இராமசாமியும் முறைப்படி பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மூத்தபிள்ளை பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாய், நல்ல வைணவ சிரோமணியாய், நெற்றியில் நாமம் துலங்கப், பயபக்தியுடன் பள்ளி சென்றுவந்தார். அங்கு கிடைத்த கல்வியின் எல்லைவரை சென்ற பின்பும், அத்துடன் விடாது, தனியே தமிழ், ஆங்கிலம், வடமொழி, பக்தி மார்க்க நூல்கள், சித்த மருத்துவ நூல்கள் யாவும் விரும்பிப் பயின்றார்.

ஈ.வெ. கிருஷ்ணசாமி “வைத்திய வள்ளல்” என்னும் சிறப்புப் பட்டம் பெற்று, இலவசச் சித்த மருத்துவமனை ஒன்றினைத் தமது நேரடிப் பார்வையில் ஈரோட்டில் நெடுங்காலம் நடத்தி வந்தார். நெற்றியில் திருமண் தீட்டியதால் ஏற்பட்ட தழும்பு இறுதிவரை மறையவில்லை. ஆனால் தமது தம்பியாரின் கொள்கைகளைத் தாமும் ஏற்று, வைதிகப் பிடியிலிருந்து விடுபட்டு, இவரும் இறுதிவரை எல்லா நிலைகளிலும் பெரியாருடன் ஒத்துழைத்து வந்தார். பெரிய நாயக்கர் என்றே அழைக்கப்பட்ட இவருக்கு, முதன் மனைவி நாகம்மாள் வாயிலாய்ப் பிறந்த மகன் ரங்கராம், இங்கிலாந்தில் டாக்டர் சுப்பராயனுடன் கல்வி பயின்று வந்தவர் 20 வயதில் இறந்து போனார். தாயாரம்மாள் என்ற ஒரு மகள். பின்னர் இரண்டாவது மனைவியான ரங்கநாயகி அம்மாள் வாயிலாக மிராண்டா,