பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இதற்காக இப்போது நாம் செய்துவரும் பிரச்சாரம் நீங்கள் அறிந்ததேயாகும். இனியும் தேர்தல் வரையிலும் நமது கழகத் தோழர்கள் எல்லாருமே, நம் இயக்கப் புத்தகங்களைத் தருவித்து, விஷயங்களை உணர்ந்து, ஆங்காங்கு அந்தந்த ஊரில், மறுப்புப் பிரச்சாரம் செய்து வர வேண்டியது மிக்க அவசியமாகும். இதை அனுசரித்து, நான் சொல்லும் விஷயங்களைச் சற்றுக் கவனமாகத் தெரிந்து, அதன்படி கூடுமானவரை நடந்து கொள்ள வேண்டுமெனக் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ராமநவமி போன்ற பண்டிகை நாட்களில், பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும், நல்ல வண்ணம் பிரச்சாரம் செய்ய முற்படுவார்கள். அதனால் நம் மக்கள் ஏமாறாமல் காப்பாற்றப்பட, நம் கழகத் தோழர்கள் ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து, மேற்சொன்ன பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு, இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் ஆகியவை தமிழர்களை இழிவுபடுத்துவதற்கென்றே ஆக்கப்பட்ட பொய்யும் கற்பனையும் ஆபாசமும் நிறைந்த நூல்கள் ஆகும். ஆகவே இந்த மூன்று சொற்களையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதிக் கையில் வைத்துக் கொண்டு, சொற்பொழிவின் முடிவில், கூட்டத்தில் மக்களுக்குத் தெரியும்படியாக நெருப்பினால் கொளுத்திச் சாம்பலாகும்படிச் செய்து காட்டவும்.

இந்தப்படி ஒவ்வொரு கூட்டத்திலும் எத்தனை பேர் செய்து காட்டக்கூடுமோ அத்தனை பேர்களும் அந்தப்படி எழுதப்பட்ட துண்டுக் காகிதத்தை, மக்கள் அறியும்படிக் கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கிக் காட்டவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பெரியார் கட்டளைப் படியே 11.8. 66 அன்று சென்னையிலும், பிற இடங்களிலும் இராமாயணம் கொளுத்தப்பட்டது என்பதைக் கூறவும் வேண்டுமா?

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டது. 10 லட்ச ரூபாய் தேர்தல் நிதி திரட்டும் பொறுப்பினை அண்ணா, தனது கழகப் பொருளாளர் கலைஞரிடம் நம்பிக்கையோடு தந்துவிட்டார். அவரும் கச்சை கட்டிக் கொண்டு களத்தில் குதித்து விட்டார், ஒரே நாளில் கொடி விற்பனையில் லட்ச ரூபாய் சேர்ந்தது. காமராசரையும் காங்கிரஸ் சமதர்மத்தையும் கேலி செய்யும் ‘காகிதப்பூ’ என்னும் நாடகத்தை எழுதித், தாமே நடித்து, நிதி திரட்டினார்; நிதியும் குவிந்தது. பெரியாருக்கு அறவே பிடிக்காத சுதந்திரக் கட்சி-அதாவது ராஜாஜி-யின் முழு ஆதரவும் தி.மு.க.வுக்கே கிடைத்து வந்தது. முஸ்லீம் லீக், இடதுசாரி கம்யூனிஸ்ட் நாம் தமிழர், தமிழரசுக் கழகம்