பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

399


விசாரணைக்கு உட்படத் தயாரா என்று, வேறு யாராவது கேட்கிறார்களா? சர்வம் பூணூல் மயம்! இதோ பட்டியலைப் பாருங்கள் எல்லாம் சரியாக வேண்டுமானால், மீண்டும் காமராசரே முதலமைச்சராக வரவேண்டும் சங்கராச்சாரியாரையும் பகிஷ்கரியுங்கள். இவர் நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்வது மதத்தைப் பரப்ப அல்ல. காங்கிரசை ஒழிக்கவே, அரசியல் பிரச்சாரம் செய்கிறார்! - என்றார் பெரியார். |

13.6.66 அன்று மாலை 5 மணிக்கு 50 கழகத் தோழர்கள் அமைதியாக மயிலையில் சங்கராச்சாரியாருக்குக் கருப்புக் கொடி பிடித்தார்கள். மயிலாப்பூரில் திருவள்ளுவர் சிலை திறக்க வந்த தத்துவஞானி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் - இந்தியக் குடி அரசுத் தலைவர் - “திருவள்ளுவர் நாத்திகவாதத்தை மறுக்கிறவர்" என்று, ஏனோ, எதனாலோ, எப்படியோ, தேவையில்லாத, தவறான, கருத்தைக் கூறிச் சென்றார். பெரியாரின் குற்றச்சாட்டுகளுக்குப் பக்தவத்சலத்தின் பதில் என்ன என்று மதுரையில் நிருபர்கள் கேட்டபோது, தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்று தப்பித்துக் கொண்டார் முதல்வர். 23.6.66 அன்று சர்தார் உஜ்ஜல்சிங் தமிழக கவர்னரானார்.

விழுப்புரத்தில் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகளைப் பகலில் நடத்திவிட்டு, மாலை நேரங்களில் வெளியூர் பொதுக் கூட்டங்களுக்குச் சென்று வந்தார் பெரியார். இராமாயண எரிப்புப் போரை மும்முரமாக நடத்துவதற்கு ஏன் பெரியார் முனைந்தார் என்பதை இங்கே விளக்குகின்றார்:- பார்ப்பனர்கள் வரப்போகின்ற தேர்தலிலே, கடவுள் மத சாஸ்திர புராண இதிகாசங்களின் பெயர்களால் ஏமாற்றி, மயக்கி, வெற்றி பெறலாம் என்கின்ற எண்ணத்தின்மீது, இப்போது எங்கு பார்த்தாலும், எந்த ஊரிலும் இராமாயணம், பாரதம், கந்தபுராணம் முதலிய புராண இதிகாசங்களின் மூலமாகப் பிரச்சாரம் செய்தும், செய்வித்தும் வருகிறார்கள்.

ஏற்கனவே நாம் இவைகளாலேயே முட்டாள்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மூடநம்பிக்கைக்காரர்களாகவும் ஆகிப், பல்லாயிர வருட காலமாக நமது நாட்டில் நாம் கீழ்சாதி மக்கள், ஈனப் பிறவிகள் என்பதை ஏற்று, பார்ப்பனருக்கு அடிமையாய் இருந்து வாழ்ந்து வந்தாலும், இன்று காங்கிரஸ் ஆட்சியின் பயனாய்ச் சிறிது கண்திறந்து, அறிவு பெற்று வருவதை ஒழிப்பதற்கு, வேறு வகையில்லை என்று கண்ட பார்ப்பனர் மறுபடியும் இந்தப் பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் பிரச்சாரத்தைப் பற்றி எண்ணும் போது அதில் 10-ல் ஒரு பங்குகூட நமது பிரச்சாரம் இல்லை என்றாலும், தயங்காமல் நம்மால் கூடியதைச் செய்து தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.