பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஏப்ரல் இரண்டாம் வாரம் சென்னையில் பல கூட்டங்களில் பெரியார் சொற்பொழிவு நிகழ்த்தினார். “காமராசரை ஒழித்தால், சமதர்மத் திட்டத்தை ஒழித்த மாதிரி ஆகும் என்பதால்தான், பார்ப்பனர் காங்கிரசை ஒழிக்க நினைக்கின்றனர். இன்று நம் நாட்டில் நடப்பது இனப்போரே ஆகும். மத மூட நம்பிக்கைக்காரர்களால் சம தர்மத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. மனு தர்ம ஆட்சியைக் கொண்டு வரப் பாடுபடும் ஆச்சாரியாருக்குக் கண்ணீர்த் துளிகளே நாற்காலிகளாகி விட்டன. எனவே கண்ணீர்த் துளிகளின் புரட்டுப் பேச்சுக்களைக் புறக்கணியுங்கள். ஏசு, நபி, புத்தர், அம்பேத்கார் நால்வருமே தியாக சீலர்கள். அவர்களைப் பின்பற்றி ஒழுக்க சீலர்களாக விளங்குங்கள்" - என்றெல்லாம் பெரியார் பேச்சு அமைந்திருந்தது. கொழுந்துவிட்டு எரியும் பெரு நெருப்பில், ஒரு டின் பெட்ரோலை ஊற்றினார் முதலமைச்சர் பக்தவத்சலம்.

3.5.65 அன்று, முதல் தமிழ் நாவலாசிரியரான மாதவய்யாவின், புதல்வர் அனந்தநாராயணன் ஐ.சி.எஸ். சென்னை உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். “இது தமிழர்களுக்குப் பேரிடியான செய்தி! பக்தவத்சலம் ஆட்சிக் கொடுமை! 10.5.66 துக்க நாள் கொண்டாடுங்கள். பார்ப்பன ஆதிக்கத்திற்கே பாடுபட்டு வருகின்ற இந்த பக்தவத்சலம், ஆச்சாரியாரின் அத்யந்த சீடர். இவரைப் போய்த் தமது இடத்தில் வைத்தாரே காமராசர்! அது எவ்வளவு தவறாகப் போய் விட்டது? பக்தவத்சலம் ஒழிக" என்று பெரியார் போர்க்கொடி உயர்த்தினார்; தொடர்ந்து விளக்கக் குறிப்புகளும் எழுதி வந்தார்| 10ந் தேதி சென்னையில் நகர் போலீஸ் 41 - வது சட்டத்தின்படி ஊர்வலம் செல்லக் கூடாதென்று சொல்லி அதிகாரிகள் கேட்டதன் பேரில், கூட்டம் உண்டு; ஆனால் ஊர்வலம் இல்லை, அதையும் நானாக நிறுத்தவில்லை என்றும், கூட்டத்தில், பக்தவத்சலம் பதவி விலகட்டும். தமிழ்நாடு தனிநாடு ஆவதே நம் இழிவுகள் எல்லாம் நீங்குவதற்கான ஒரே பரிகாரம் - என்றும் பெரியார் முழங்கினார்!

இவர் எதிரியின் ஒற்றர் ஆவார், என்னைத் தவறாக நினைக்காதீர்கள் காங்கிரஸ்காரர்களே! நான் காங்கிரஸ் விரோதி அல்லன்! தமிழர்களுக்கு விகிதாச் சாரப்படி உரிமை வேண்டும். அது தடுக்கப்பட்டால், தடுக்கும் எதையுமே நான் எதிர்ப்பேன்! இப்போது சாதி - மத உணர்ச்சி வலுத்துவிட்டது. உயிரைக் கொடுக்க உறுதி கூறி உடனே நூறு தோழர்கள் ரத்தத்தில் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள். பார்ப்பான் வேறு; நாம் வேறுதான்; இதோ பாருங்கள்! தவறு செய்த கிருஷ்ணமாச்சாரியைப் பார்ப்பனர்கள்தானே காப்பாற்றுகிறார்கள். சாணக்கியர் ஆச்சாரியாரிடம் நமது விபீஷணர்கள் சரணாகதி அடைந்து கிடக்கிறார்களே! பார்ப்பன உணர்ச்சியுடன் சலுகைகள் செய்து வருகிற நமது தொழிலமைச்சர் (ஆர். வெங்கட்ராமன்)