பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

397


காட்டுவதாகும் என்றார் புரட்சி நடிகர். மணமக்கள் சார்பில் பெரியாருக்கு வெள்ளிக் கைத்தடி வழங்கப் பெற்றது. மத்திய அரசும், மாநில அரசும், உபரி பட்ஜெட்டுகளைச் சமர்ப்பித்து, 1967-ம் ஆண்டு தேர்தல் வரவிருப்பதை நினைவூட்டின!

நம் நாட்டில் ஜனநாயகம் பெரும்பாலும் காலிகள் நாயகமாகவேயிருக்கிறது. சட்டம் மீறுகிறவர்கள் தேர்தலில் நிற்காமல் தடுக்க வேண்டும். இல்லாவிடில் vagabonds ஆட்சியே வந்து சேரும்! எனவேதான் அடுத்த தேர்தலிலும் காங்கிரசே பெருவாரியாக வெற்றி பெறச் செய்ய வேண்டும். எதிர்க் கட்சிகளை உதாசீனம் செய்து விடுங்கள்! தமிழர் வரலாற்றிலேயே, காமராசர் ஆட்சிக் காலந்தான் ஒரு திருப்பு மையமாகும். மறந்து விடாதீர்கள் - என்று பெரியார் சென்னையில் ராமாயண எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டத்தொடரில் கூறி வந்தார். “வால்மீகி ராமாயணம் கம்பராமாயணம் என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கொளுத்துங்கள், கூட்டத்தில் கூடி நின்று!“ என்பதாகப் பெட்டிச் செய்தி “வீடுதலை”யில் வந்து கொண்டிருந்தது. கும்பகோணத்தில் மார்ச் 19 சோஷலிச விழாவும், 20 பெரியார் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றன. பெரியாருடன், காங்கிரஸ்காரர்களான கோபாலசாமி தென்கொண்டார், பொறையாறு பார்த்தசாரதி ஆகியோரும் பங்கேற்றனர். 31-ல் திருச்சியில், ராமாயண எரிப்புப் பொதுக் கூட்டத்தில் பெரியாரும், ஆனைமுத்து, செல்வேந்திரன், வீரப்பா, பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். “30.3.66 முதல் 5.4.66 வரை இராமாயண எரிப்பு வாரம் கொண்டாடிக் கொளுத்திச் சாம்பலாக்கிக் காட்டுங்கள்! கொளுத்துங்கள், கொளுத்துங்கள்!” என்று பெரியாரும் “விடுதலை”யும் ஊக்கம் தந்தது குறிப்பிடத் தக்கதாகும். வால்மீகியைவிடப் புளுகன் கம்பனே என்ற, தமிழாய்ந்த பொறியாளர் பா.வே. மாணிக்க நாயகரின் முடிவு, “விடுதலை”யில் பிரசுரமாயிற்று.

சென்னை உயர்நீதி மன்றத்துக்குப் பிரதம நீதிபதியாகத் தகுதி வாய்ந்த உயர் அனுபவசாலி ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்- அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி தமிழருக்கே தரப்பட வேண்டும் - என்பன பெரியாரின் வேண்டுகோள் துணுக்குகளாகும். இராமாயணம் ஆபாசக் களஞ்சியமே என்ற தலைப்பில் தொடர் துணுக்குகள் “விடுதலை” முதல் பக்கத்தில் முக்கிய கட்டடச் செய்திகளாக வந்தன. நாடெங்கும் ராமாயண எரிப்புப் போர்ச் செய்திகள் “விடுதலை” அலுவலகத்துக்கு வந்து குவிந்தன.

கல்லூரிகள், தொழில் கல்லூரிகள் அதிகரிக்கப்படும்; மின்சார பம்பு வசதிகள் பெருகும்; ரிசர்வ் பேங்க் அருகில் நால்வழிச் சுரங்கப் பாதை திறப்பு- என்ற அரசுத் தரப்புச் செய்திகள் தேர்தலுக்கான கட்டியங் கூறின!