பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சர்வ சக்தியுள்ள பத்திரிகைகாரர்கள், போதாக் குறைக்கு அரசாங்கத்தார் ஆகிய அனைவருடைய வெறுப்புக்கும் அதிருப்திக்கும் எதிர்ப்புக்கும் விஷமப் பிரச்சாரத்திற்கும் தண்டனை கண்டனங்களுக்கும் ஆளாகி இருந்து, எதிர்ப்பையும், போராட்டங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்துப் பொது மக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை - இவை கனவு அல்ல, உண்மை நினைவே, காரிய சாத்தியமே - என்று கூறிவந்து, அவைகளின் நடப்புகளையும், நடப்புக்கு ஏற்ற முயற்சிகளையும் நேரில் கண்டு களிக்கிறேன் என்ற கருத்தில் தான், எனது இலட்சியத்தில் என் தகுதிக்கு ஏற்ற அளவில் முழுத்திருப்தி அடைகின்றேன் என்று குறிப்பிட்டேன்.

நான் காங்கிரசிலிருந்து விலகிய போதே, இனி இந்தியாவின் ஆட்சி ஜனநாயகமாகத்தான் இருக்க வேண்டும் என்று முதல் முதல் கருதியவன் நான்தான்! அதனால்தான் ஜனநாயகம் என்ற வடமொழிக்கு நேரான “குடி அரசு" என்பதாக என் பத்திரிகை துவக்கினேன். குடி அரசு ஆட்சியின் கொள்கை சமதர்மமாக இருக்க வேண்டுமென்று, 1927, 28 சுயமரியாதை மாநாடுகளில் தீர்மானங்கள் இயற்றி, 1930 ஈரோடு மாநாட்டில் சமதர்மத்துக்கு விளக்கத் தீர்மானங்களாகச் சில நிறை வேற்றினோம்:- நபர் ஒன்றுக்கு 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக் - கூடாது. அதுவும் உழுகிறவனுக்குத் தான் நிலம் இருக்க வேண்டும். பண்டங்கள் உற்பத்தி செய்வோருக்கும் உபயோகிப்போருக்கும் இடையில், எந்த உருவத் தரகர்களும் இருக்கக் கூடாது. கல்வி விஷயம், எல்லாருக்கும் பத்தாம் வகுப்பு வரை, அதாவது இன்றைய எஸ்.எஸ்.எல்.சி. வரை, சர்க்கார் அளிக்கும் இலவசக் கல்வியாக இருக்க வேண்டும். உயர்தரக் கல்லூரிக் கல்விக்கு அவரவர் தங்கள் செலவிலேயே கற்று வரும்படிச் செய்ய வேண்டும்.

ஆனால், இன்று எல்லா மக்களுக்கும் எல்லாச் செலவையுமே சர்க்கார் ஏற்று, இலவசக் கல்வியாக ஆக்கப் போவதாகத் தெரிகிறது. ஆகவே மேலே குறிப்பிட்ட எனது கனவுகள் நினைவாக, நேரிடையாகச் செயல்படுவது எனக்குத் திருப்தி அளிக்கக் கூடியவை அல்லவா? எனவே, நான் எனது இலட்சியத்தில் மனக் குறையடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கின்றேன். இதை 4, 5 மாதங்களுக்கு முன் காமராசர் வெளியிட்டார். பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை - என்பதாகப் பேசினார்.

இனி எனக்கேதாவது குறை, கவலை இருக்குமானால் அது, மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். இந்த நிலைமை, காரியத்தைக் கெடுக்கும்படியான அவ்வளவு பலக்கை என்றுமே