பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காரணம், பார்ப்பனருடைய வர்ணாசிரம தர்மத்துக்குக் கேடு வந்து விட்டது என்பது ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக்கியதும் காமராஜர் என்கின்ற ஒரே காரணந்தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கிய காரணமாகும்.

பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்கறை இருக்கிறதென்பது, அப்துல்காதர் ஆடி அமாவாசையன்று தன் தகப்பனாருக்குத் தர்ப்பணம் கொடுத்தார் என்பது போன்ற கதையேயாகும். எல்லா ஆரியர்களுக்கும் மாடுதான் முக்கிய ஆகாரமாய் இருந்திருக்கிறது. இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட மக்களுக்குப் பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன்தான் நம்புவான்?

நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல் ஓர் இரட்சகர் இதுவரை தோன்றியதில்லை. அதனால்தாள் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும், காமராஜர் மீது ஒரு கண் வைத்து இருக்கின்றார்கள். அவர் இருந்த வீட்டைக் கொளுத்தினார்கள். காமராஜருக்கு ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டமில்லை, அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள். அவ்வளவு தான் பிறகு நம் நாடு வர்ணாசிரம தர்ம நாடாகிவிடும். பலருக்கும் நாதியற்ற நிலை ஏற்படும். பிறகு நாடு என்ன ஆகுமோ? எப்படியோ இருக்கட்டும்; இனிக் காமராஜர் தக்க பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

பார்ப்பன எதிர்ப்புக் கட்சித் தோழர்கள் ஒவ்வொருவரும் 6 அங்குல நீளத்திற்குக் குறையாத கத்தி ஒன்றைத் தற்காப்புக்காக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். சீக்கியர்களது மத தர்மம் போல், கண்டிப்பாகக் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காரியம் காமராஜரைப் பாதுகாக்க அல்ல! நம் நாட்டில் உள்ள 3 கோடி கீழ்ஜாதி (சூத்திர) மக்களை இழவிலிருந்தும், அடிமை நிலையிலிருந்தும், படுகுழிப் பள்ளத்தில் இருந்தும் வெளியாக்கிப் பாதுகாக்கத்தான்!"

பூரிசங்கராச்சாரியார் பசுவதையைத் தடுக்கத் தம்மைத் தாமே வதைத்துக் கொண்டு உண்ணாவிரம் இருக்கத் தொடங்கினார். இவ்வளவு காலித்தனங்களையும் மறைக்க இப்படி நாடகமாடினால் அரசு வேடிக்கை பார்க்குமா? அவரைக் கைது செய்தது. பெரியார் மிகவும் மகிழ்ச்சியுற்றார். குன்றக்குடி அடிகளாரைக் கைது செய்தபோது சும்மாயிருந்தவர்கள், இதற்கும் சும்மாயிருக்க வேண்டியதுதானே யோக்கியத் தன்மை என்றார். நாடெங்கும் நமது தோழர்கள் சர்க்கரை, மிட்டாய் வழங்கி மகிழ்ச்சி கொண்டாடுங்கள். சங்கராச்சாரியாரைக் கைது செய்ததற்காக டெல்லி அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன்.