பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

407


சட்டத்தை மீறுகிறவர்கள் யாராயிருந்தாலும், ஒன்று போல் சமமாக நடத்தப்படுவார்கள் என்று காட்டிக் கொண்டதற்காகப் பாராட்டுகிறேன் - என்று பெரியார் நவம்பர் 24-ம் நாள் “விடுதலை”யில் எழுதினார்.

காமராசரைத் தாக்க முயன்ற சங்கராச்சாரிக் கூட்டத்தைக் கண்டித்து, நாடெங்கும் கண்டன நாள் நடத்திப் பிரச்சினையைப் பெரிதாக்க முதலில் எண்ணிய பெரியார், இந்த ஒரு சங்கராச்சாரி என்ற தனிப்பட்ட மனிதரைக் கண்டித்துப் போராட்டம் நடத்தி, நாம் ஏன் ஆயிரக்கணக்கில் சிறை சென்று, நமது தோழர்களின் சக்தியை விரயமாக்க வேண்டும், என்று சிந்தித்துக், கருத்தினை மாற்றிக் கொண்டார். “தேர்தல் நேரத்தில் எதிரிகள் இதைத் தங்களுக்குப் பலமாக எடுத்துக் கொள்வார்கள். ஆகையால், தோழர்களே! உங்கள் வேகத்தைத் தேர்தலில் காண்பியுங்கள்! தேர்தலுக்குப் பிறகு நமக்கு நம் வேலை நிறைய இருக்கிறது" என்றார் பெரியார்.

சென்னை விருகம்பாக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகம், 1966 டிசம்பர் 29,30,31, 1967 ஜனவரி 1 ஆகிய நான்கு நாட்களும் மாநாடு நடத்திற்று. அண்ணா தலைமையில், கலைஞர் மாநாட்டைத் துவக்கினார். காஞ்சி கல்யாணசுந்தரம் கொடியேற்றினார். ஏ.கோவிந்தசாமி கலைவாணர் பெயராலமைந்த கண் காட்சியைத் திறந்தார், தீவுத்திடலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தின் தலை விருகம்பாக்கத்தை அடைந்தபோது, வால் தீவுத் திடலிலேயே இருந்தது. 15,000 சைக்கிள், 500 பஸ், பல லட்சம் மக்கள்! மாநாடும், ஊர்வலமும், மக்களின் ஆரவாரமும் ஓர் அரசியல் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பினால், அந்த வெற்றி தி.மு. கழகத்திற்கே கிடைக்கும் - என்று பத்திரிகைகள் கருத்துரைத்தன,

பார்ப்பனப் பத்திரிகை விளம்பரங்களும், சினிமாக் கவர்ச்சியும் கூட்டத்தைச் சேர்க்கலாம். ஆனால் கொள்கை அடிப்படையில் மக்களின் ஓட்டைச் சேர்க்க அவர்களால் முடியாது. இந்த முறையும் காமராஜரின் காங்கிரஸ்தான் தமிழ் நாட்டை ஆளும்-என்று திடமாக நம்பித், தம் பணியை முடுக்கிவிட்டார் பெரியார், 1966-ல்!

1967-ல்?