பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

423


நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத் தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள் இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம்; நானும் ஆதரவாளிக்கலாம்” என்று எழுதியிருந்தது இருதரப்பாருக்கும் அனுசரணையான வாசகமல்லவா? வந்து சந்தித்தவர்களுக்கும் வந்த பின் ஆதரிக்கத் தொடங்கியவருக்கும் இது ஓர் எழுதா ஒப்பந்தம் உடன்படிக்கை - தானோ?

எனவேதான் பெரியார், தமிழர்களின் பிறப்புரிமையான வகுப்புரிமை முழக்கத்தை இப்போதும் தொடங்கினார்:- "தமிழ் நாட்டில் தமிழர்கட்கு வகுப்பு உணர்ச்சி ஏற்பட்ட காலமான 1920-ஆம் ஆண்டு முதல், நாட்டில் ஒழுக்கம், நாணயம், அமைதி, கண்ணியம், நீதி, நேர்மை முதலிய எல்லா நற்குணங்களையும் ஒழியும்படிச் செய்து விட்டார்கள்! யோக்கியன் அயோக்கியன் என்ற பேதமேயில்லாமல் செய்து விட்டார்கள். மனிதனுக்கு மனிதன், தான் எப்படிப்பட்ட ஈனத்தன்மையான காரியங்களைச் செய்தாவது வாழ வேண்டியதுதான் மனிதப் பண்பு என்று ஆக்கிவிட்டார்கள். ஆண்களோ பெண்களோ, யாரும் ஒழுக்கத்தைப் பற்றியோ நாணயத்தைப் பற்றியோ சிந்திப்பது முட்டாள்தனமென்றே ஆக்கிவிட்டார்கள்.

இன்றைய நிலைமை, ஒரு ராணுவ ஆட்சி ஏற்பட்டுச் சர்வாதிகார அரசு ஏற்பட்டால் ஒழிய மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்படாது; நல்வாழ்வு ஏற்படாது என்கிற நிலையை உண்டாக்கி விட்டார்கள்! காரணம், தங்கள் நிலை பாதுகாப்பாய்விட்டது; மற்ற எவன் எக்கேடு கெட்டால்தான் நமக்கென்ன என்கிற முடிவுதான்! மனு தர்மத்துக்கு மாறான தன்மையைக் காங்கிரஸ் தனது கொள்கையாகக் கொண்டவுடன், நாட்டை அந்நியன் வசப்படுத்தியாவது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துணிந்துவிட்டார்கள். நாட்டில் இமயம் முதல் குமரி வரை உள்ள எல்லாச் செல்லாக் காசுகளையும், கீழ்த்தர மக்களையும், சமுதாய எதிரிகளையும், எதைச் செய்தாவது வயிறு பிழைக்கும் தன்மையில் உள்ளவர்களையும் தேடிப் பிடித்துத் தங்கள் வசமாக்கிக் கொண்டு, பேடி யுத்தம் நடத்துகிறார்கள்! இதனால் பொறுப்பும் நேர்மையும் உள்ள மக்கள் பயந்து மறைந்து வாழ்கிறார்கள். '

நாட்டின் நிலைமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த தேர்தலையே பார்க்கலாம். தேர்தலில் ஒவ்வொரு அபேட்சகர் ஒரு லட்சம், ஒன்றரை லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும், சிலர் தோற்றுப் போய் இருக்கிறார்கள். சில காலிகள் தேர்தலில் நின்றதன் மூலம் 10,20,30 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் சேர்த்துக் கொண்டார்கள். காமராசரைத் தோற்கடிப்பதற்காக 2,3 லட்சம் செலவாயிற்று என்றும் சொல்லுகிறார்கள்!