பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

466

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மனதின் பட்டதை எழுதினேன். இவற்றில் குற்றமிருப்பின் மன்னித்தருள்க” இவ்வாறு கோரினார். “நமது ஜனநாயகம் சுத்த காட்டுமிராண்டி ஜனநாயகமாகும்” என்று 19ந் தேதி பெரியாரை எழுதத் தூண்டியது பாண்டிச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறிய சம்பவமாகும். “இதற்குப் பரிகாரம் பிறகு எழுதுகிறேன்; இது வடமாநிலங்களில் இருந்து பரவிய தொத்து நோய்” என்றார்.

விளை நிலங்களை யாராவது வேண்டுமென்றே தரிசு போட்டால் தண்டிக்கப்படுவார்கள், இரண்டாம் முறையும் அப்படிச் செய்தால் நிலத்தைப் பறிமுதல் செய்யப்படும் - என்று அண்ணா சட்ட மன்றக் கேள்வி நேரத்தில் பதிலாகச் சொன்னார். தஞ்சாவூர் மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தொகுதியில் கோ.சி.மணி ஆசிரியர் தொகுதியில் வி. ராஜகோபால் பி.ஓ.எல், ஆகியோரைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக வெற்றி பெறச் செய்யுமாறு, தஞ்சை மாவட்ட தி.க. தோழர்களுக்குப், பெரியார் அறிக்கை மூலமாக, 22.3.68 அன்று வேண்டுகோள் விடுத்தார். சட்டமன்ற மேலவை உறுப்பினராக எஸ்.ராகவானந்தம் தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டார்-21.4.68 முதல் ஆறு ஆண்டுகளுக்கு! மார்ச் மாத இறுதியில் சென்னையில் மாணவர்-பஸ் தொழிலாளர் கலவரம் பயங்கரமாக உருவெடுத்தது! ஒருவர் மாண்டு போகவும் நேரிட்டது!

மருத்துவ மனையிலிருந்து பெரியார் மனம் பதறினார். “நமது நாடு சிவில் ஆட்சிக்கே லாயக்கில்லாமல் போய் விட்டது. இந்த நேரத்தில் போலீசுக்கு முழு அதிகாரம் கொடுத்து விட வேண்டும். வெறியாட்டங்களை, வன்முறைகளை ஒழிக்க வேண்டும்! டாக்டர்களே! மாணவர்களே! அண்ணாவை நம்புங்கள் அவரைப் பெருமைப்படுத்துங்கள்! நம் எதிரிகள் சிரிக்கும்படிச் செய்து விடாதீர்கள்! என் நோய்கூட அதிகமாகி விட்டது” என்று கதறினார்.

அண்ணாவின் அரசு ராஜினாமாச் செய்ய வேண்டும் என்கிற அளவுக்குக் காரியம் மிஞ்சிவிட்டது. 1.4.68 “விடுதலை”யில் “இராஜிநாமாவுக்கு அப்புறம் என்ன?” என்ற தலையங்கம் பெரியாரால் தீட்டப்பட்டது. “இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் அடிதடி கலவரம் ஏற்பட்டால், அந்த வன்செயல்களுக்கும் அரசுதான் பொறுப்பா? அதற்காக இராஜினாமா செய்யச் சொல்வதா? காங்கிரஸ் ஆட்சியில் இதைவிட மோசமாக நடக்கவில்லையா? 25.1.1965 முதல் 12.2.1965 வரை 18 நாள் பாரத யுத்தநாள் அளவு கலவரங்கள் தமிழ் நாட்டில் நடக்க வில்லையா? பாறைபோல் நின்று சமாளித்தார் என்று பக்தவத்சலத்தைக் காங்கிரசார் பாராட்டவில்லையா? பிறகு, இதே பக்தவத்சலம், இந்த வன்முறைகளை யார் தூண்டிவிட்டாரோ; அதே இராஜாஜியை அவர் வீட்டுக்குப் போய்ச் சந்திக்கவில்லையா? சந்தித்து, வன்முறை தூண்டிய அவர் பத்திரிகை மீது அரசாங்கம் எடுத்த