பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

465


மகள் விழுந்து தத்தளிக்கும் போது, தன் மானத்தைப் பற்றிக் கவலையில்லாமல், தன் சீலையை அவிழ்த்து, ஒரு முனையை விசி, தண்ணீருக்குள் எறிந்து தவிக்கும் மகளை அந்த முனையைப் பிடித்துக் கொள்ளச் செய்து, கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாய் போல் நாம் காப்பாற்றக் கடமைப் பட்டிருக்கிறோம். நான் எப்படி 1954 வரையில் காங்கிரசை எதிர்த்து வந்தேனோ, அதே போல், 1967 வரையில் தி.மு.கழத்தையும் எதிர்த்து வந்தவன்தான் இப்போதுகூட 3,000 பேர் வரையில் போராட்டத்தில் சிறை செல்லத் தயாராய் இருந்து கொண்டு தான், இந்த ஆட்சியை ஆதரிக்கிறோம். இதையெல்லாம் புரிந்து கொண்டு, காங்கிரஸ் தமது எதிர்ப்புப் போக்கைக் கண்ணியமாய் மாற்றிக் கொள்ள வேண்டும்!” என எழுதினார் பெரியார்.

சென்னைப் பொது மருத்துவமனையில் சிறுநீரகச் சிகிச்சைக்காகப் பெரியார் 15.3.68 முதல் சில நாட்கள் தங்க நேரிட்டது. மணியம்மையார் உடனிருந்தார்கள். முதலில், 27-ந் தேதி வரையில் தங்க நேரிடலாம், அது வரை நிகழ்ச்சிகளைத் தள்ளி வைப்பதைப் பொறுத்தருள வேண்டும் என்று அறிவித்த வீரமணி, 28ந் தேதியன்று, 15 நாள் ஆகியும் மூத்திரம் இறங்குவதில் நோய் தணியவில்லை. எனவே இன்னும் 10, 20 நாள் தங்கவேண்டியிருக்கும் என்றார். பெரியார் 7.4.68 அன்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, ஒருவாரம் ஓய்வெடுக்கத் தங்கினார். ஆயினும் தலையங்கம், பெட்டிச் செய்திகள், அறிக்கை எழுதுவதில் ஓய்வில்லை!

“மாணவரின் திறமை பண்பு ஆகியவற்றை மார்க்கினால் அறியமுடியாது. பரிட்சை முறை ஏற்பட்டதே, உயர் ஜாதிக்காரரின் கொலை பாதகச் செயலால்தான். பரீட்சையில் ஒருவனுக்கு விருப்பம் போல் பாஸ் பெயில் போட்டுவிடலாம். தொழிலில் ஈடுபடும் ஒரு மாணவனுக்கு அவன் வாங்குகிற மார்க் எவ்விதம் பயன்படும்? தகுதியும் திறமையும் என்ன மேல் ஜாதியாருக்கு மட்டுமே உரிமையா! விகிதாச்சார உரிமையை மறுப்பது, மேல் ஜாதியாரின் ஜாதிக் குறும்பினால் தானே! ஆகையால், பிற்படுத்தப்பட்ட மக்களை எப்படியும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டியது ஆட்சியில் உள்ளவர்களின் நீங்காக் கடமையாகும்“ என்று மார்ச் 16-ல் எழுதினார். 17-ல் “மதச்சார்பற்ற ஆட்சியும் நமது அமைச்சும்” என்ற தலையங்கம், “மாண்புமிகு கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் இராமாயண - பாரதக் கதைகளைப் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது குற்றமல்ல; அது மதச் சார்பற்ற ஆட்சிக்கு விரோதமுமல்ல என்கிறாராமே! இதைச் சொல்வதற்குப் பழைய பக்தவத்சலமே போதுமே - இவர் தேவையில்லையே! மூட நம்பிக்கை நூல்களைப் பள்ளிகளில் நுழைய விடாதீர்கள்! அப்படி அவை நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது மந்திரிகளின் அருளாக இருக்க வேண்டும். என்