பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அமெரிக்கரில் நீக்ரோக்கள் 2 கோடி தான். நீக்ரோக்களோடு கலந்தால், தங்கள் குழந்தைகளின் நிறம் மாறி விடுமே என்றுதான் வெள்ளையர் பயப்படுகிறார்களே தவிர, நம்மைப் போல் தீண்டாத சாதியென்று அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவ்வளவு உரிமை தந்தும், இப்போது தங்கள் தலைவரான மார்ட்டின் லூத்தர் கிங் கொலை செய்யப்பட்டதால், நீக்ரோக்கள் சட்டத்தைத் துச்சமாக மதித்துக் களி நடனம் புரிகிறார்கள் இப்போது அங்கே நீக்ரோ மக்களின் துப்பாக்கியே சட்டம்!” என்று 13ந் தேதியும், “நாம் உயிர்த் தியாகத்துக்குத் துணிய வேண்டும்; அப்போதுதான் பிரிவினை சாத்தியமாகும். காங்கிரஸ்காரர்களைப் போலப் பதவிக்கு அலையக் கூடாது. தேர்தலில் தோற்றார்கள். மந்திரி பதவி பறிபோனது. இப்போது Side Business ஆக சி.சுப்ரமணியம், வெங்கட்ராமன், அளகேசன் ஆளுக்கு ஒன்று தேடிக்கொண்டார்கள். கவர்னர் பதவி கிடைக்குமா என்று பக்தவத்சலம் அலைகிறார். இப்படிப்பட்ட அரசியல் காரர்களால்தானே மக்களின் ஒழுக்கம் பாழாகிறது?” என்று 14ந் தேதியும், பெரியார் “விடுதலை” யில் தலையங்கம் தீட்டியுள்ளார்.

தமிழகப் பொதுப்பணி- போக்குவரத்துத் துறை அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகன் முத்து - கலைஞரின் மைத்துனர் சிதம்பரம் இசைச்சித்தர் சி.எஸ், ஜெயராமன் அவர்களின் மகள் சிவகாம சுந்தரி ஆகியோருக்கும்; கலைஞரின் மகள் செல்வி கலைஞரின் சிறிய தமக்கையார் மகனும் முரசொலி மாறனின் தம்பியுமான செல்வம் ஆகியோருக்கும்; 12.4.68 மாலை 5.30 மணிக்கு, சென்னை ஆபட்ஸ்பரி திறந்த வெளியில், அண்ணா தலைமையில் திருமணம், பெரியாரை அடுத்து அமர்ந்த இராஜாஜி, “நாங்கள் இப்படி அமர்வதே உண்மைத் திருமணம்” என்றார். “இவர்கள் அன்புடன்தான் பழகுகிறார்கள். இதனால் - இன்றைய மணமக்களைத் தமிழ் நாடே வாழ்த்துவதாக அமைகின்றது, நாம்தான் இவர்கள் இருவரையும் பற்றி விவரம் தெரியாமல் விழிக்கிறோம்” என்றார் அண்ணா ! 15.4.68 அன்று அண்ணா அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வழியில் ரோமில் போப்பைச் சந்தித்தார். பாரீசில் டாக்டர் மால்க்கம் ஆதி சேஷய்யா, வாஷிங்டனில் ஊதாண்ட் ஆகியோரையும் சந்தித்தார் அண்ணா. யேல் பல்கலைக் கழகம் முதல் முறையாக அமெரிக்கரல்லாத ஒருவருக்கு - அண்ணாவுக்குச் - சப் ஃபெல்லோஷிப் வழங்கிச் சிறப்படைந்தது. திரும்பி வரும் போது ஜப்பானில் சேலம் இரும்பாலை பற்றியும் அண்ணா பேச்சு நடத்தி விட்டு வந்தார்.

14.4.68ல் பெரியார் அறிவிப்புக்கிணங்க, சென்னையில் பெரியார் திடலில், டெல்லி ஆதிக்கக் கண்டனநாள் பொதுக் கூட்டத்தில் பெரியார் முழங்கினார். “தமிழர் மான வாழ்வுக்காக சுதந்திரத் தமிழ்நாடு பெற்றே தீருவோம். 3,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு