பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

475


அதைத் தூவிவிட்டார். அந்தச் சாம்பல் தூளானது பெரியாரவர்களின் மேல்பட்டது. அதைப்பற்றியெல்லாம் லட்சியம் செய்யாது, பெரியார் பேசி முடித்தார். அடுத்து, தான் பேச ஆரம்பித்ததும், சொன்னேன்:- ‘பெரியவரே! நீங்கள் 30, 40 வருடங்களுக்கு முன் இதுபோல் செய்திருந்தால், பெரியாரின் கருமை நிறமான தாடி உங்கள் சாம்பல்பட்டு வெள்ளையாகி இருக்கும். இப்போது நீங்கள் தூவிய சாம்பல், அவர் தாடியை மேலும் வெண்மையாக்கிப் பளபளப்பூட்டியிருக்கிறது’ என்றேன். அந்தக் காலத்தில் இது போன்ற எத்தனையோ இடையூறுகள் நிகழ்ந்துள்ளன.

என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூடத் தவறு. இந்த நாட்டு அரசியலை நமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து, அதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன்! நம்மிடம்தான் ஆட்சி வந்து விட்டதே; எல்லாவற்றையும் உடனே செய்துவிட முடியும் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது!

30,35 ஆண்டுகளுக்கு முன், க்ஷத்திரியர் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்த சமுதாயத்தினருக்குக் கூடக் கோயிலுக்குள் நுழைய உரிமையில்லாமல் இருந்தது. கோயிலுக்குள் கல்தானே இருக்கிறது. நீ அங்கு போகாதே!' என்று பெரியார் பிரச்சாரம் செய்தார். இவர்கள் எல்லாம் கோயிலுக்குள் வராவிட்டால் வருமானம் வராதே என்று, இவர்கள் கோயிலுக்குள் வரலாம் என்றாக்கினார்கள்.

இந்த நள்ளிரவில் இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறீர்கள்; ஒருவர் நெற்றியில் கூடத் திருநீரோ, திருநாமமோ காணோம். இந்த இரண்டுமே பெரியாரின் சலியாத தொண்டினால் விளைந்த பலன் தானே! தம் வாழ்நாளில் சொல்ல வேண்டியதைச் சொல்லிச், செய்ய வேண்டியதைச் செய்த பெருமை பெரியார் ஒருவரைத்தான் சாரும் சமுதாயத்தின் அடித்தளம் வரை சென்று, சுய மரியாதைப் பிரச்சாரம் செய்த புரட்சி எழுத்தாளரோ சீர்திருத்தவாதியோ வேறு யாருமே இல்லை. பெரியாருக்கு நிகர் பெரியார்தான் என்றால் இது மிகையல்ல; உண்மைநிலை!

பெரியாரவர்கள் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகளை ஆதரித்து வந்த போதிலும், அவர் தமது சமுதாயக் கருத்துகளைச் சொல்லாமல் இருப்பது கிடையாது. காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த போது, ‘பெரியார் எவ்வளவு அழகாக் காங்கிரசைப் பற்றி மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்கிறார் தெரியுமா?’ என்று அவரைப் புரிந்துகொள்ளாத சிலர், என்னிடம்