பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்




 
3. மணந்தார்
இல்லறமாகிய நல்லறம் மேற் கொள்ளல் - வாழ்க்கைத் துணையாய் வந்து வரலாறு படைத்த வீரப் பெருமாட்டி - பெரியாரின் முதல் ஆறாண்டு மணவாழ்வு - 1899 முதல் 1904 வரை.

முரட்டுத்தனமாய்த் துள்ளித் திரிந்து, மிரட்டி வருகின்ற காளை மாட்டுக்கு, மூக்கணாங்கயிறு மாட்டுவது போலத், துடுக்கு மிகுந்த பிள்ளையை அடக்கிட, இராமசாமிக்கு மணம் பேச முனைந்தனர், வெங்கட்ட நாயக்கரும் சின்னத்தாயம்மாளும். வயதோ பத்தொன்பது; பிறந்ததோ செல்வந்தர் வீட்டில்; நண்பர்களோ, எதற்குந் துணிந்தவர்கள்; சுபாவமோ. கட்டுப்பாடற்றது! இந்தச் சூழ்நிலையில் இராமசாமியின் நாட்டம் விலைமாதர் இல்லங்களை நோக்கிச் செல்லத் தொடங்கிற்று எனப் பெற்றோர் கேள்வியுற்றபின் வாளா இருப்பதோ? செல்வச் செருக்கில் செம்மாந்து நிற்கும் தமது செழுமைக்கேற்ற நல்வளமை நிறைந்த இடத்தில், இளமையும் எழிலும் பொருந்திய பெண் கிடைக்குமா, என உறவினர்க்கெல்லாம் தூது விடுத்தனர்.

பெற்றோர் பார்த்து யாரை யாருக்குக் கட்டி வைக்கிறார்களோ, வெட்டிப் பேசாமல், அட்டியின்றி அதனை ஏற்று, ஒட்டிப் போகும் பண்பாடும் பழக்கமும் நிலவி வந்த குடும்பம்; காலமோ இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளிகூட முளைக்காத நேரம்! இந்தச் சுற்றுச் சார்பில் வளர்ந்த பிள்ளையாயினும், இராமசாமியின் போக்கும் நோக்கும் தனித்தன்மை பெற்றவை அன்றோ? எனவேதான் தாய் தந்தையரின் விருப்பத்துக்கு முரண்பட்டுத் தமக்கு வேறொரு பெண்மீது நாட்டமென்றும், மணந்தால் அந்தப் பெண்ணை மணப்பதாகவும் உறுதியாகக் கூறிவிட்டார் இராமசாமி! பெற்றோரின் கற்பனைக் கோட்டை தகர்ந்து துகளாயிற்று. 'சரி, வேறு வழியில்லை; இந்தப் பிள்ளையாண்டான் சொந்த விருப்பத்தின்படியே நடப்பான்; சொன்னால் கேட்க மாட்டான்! யார் அந்தப் பெண் பாவை?' என்று விசாரித்தனர் பெற்றோர்.