பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

48



சின்னத்தாயம்மையாரின் தம்பி உறவுடைய சேலம் தாதம்பட்டி ஹெட்கான்ஸ்டபிள் ரங்கசாமி நாயக்கருக்கு மனைவி பொன்னுத் தாயம்மாள் மூலமாக தேவராஜன் என்ற ஒரு மகன், முத்தம்மாள், நாகம்மையார் இரு பெண்மக்கள். அவர்களில் இளைய பெண் நாகம்மை பதின்மூன்றாண்டு பிராயத்தில் இருந்தது. அதற்கு இராமசாமியார் மீது உள்ளுறக் காதல். சமுதாயத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அந்தப் பெண், தனது மன நாட்டத்தை வெளிப்படுத்தியும், தகுதிக்கு மீறிய செயல் எனத் தடுத்திட்ட அதன் பெற்றவர்கள், யாரோ ஒரு பண்பாடற்ற பணம் படைத்த முதியவருக்கு மூன்றாந்தாரமாக்க இசைவு தந்தனர். தன் காதல் போயின் சாதல் என்ற நாகம்மை தற்கொலைக்குத் தயாராகிவிட்டது!

இந்த நாகம்மைதான் இராமசாமியின் உள்ளங்கவர்ந்த கன்னியாம் என, இரு சாராரும் தெள்ளிதின் உணர்ந்து கொண்டனர். பிறகென்ன? இப்படியாகப் போராடிப் புனைந்த புது மணவாழ்வில் இணைந்த இரு இளம் நெஞ்சங்களும் அளவிட ஒண்ணா அன்பு வெள்ளத்தில் ஆழ்ந்து திளைத்தன. உறுதியுடன் நின்று பெற்ற வெற்றித் திருமணம், இறுதிவரை இன்ப இணைப்பாகத் திகழ்ந்ததில் என்ன வியப்பு? முப்பத்தைந்தாண்டுகள் இந்த இலட்சிய தம்பதிகள், ஒன்றிய மனத்துடன் நன்றாக வாழ்ந்து காட்டி, வரலாறு செதுக்கினர்.

மாணாக்கராயிருந்து அய்ந்தாண்டுகளை வீணாக்கியபோது, இராமசாமியின் பிள்ளை விளையாட்டுகள் பெரும் தொல்லையாயிருந்து வந்தன பெற்றோர்க்கு. ஓரளவு திசை திருப்பமாயிருக்கட்டும் என்று கருதியே திருமணவாழ்வில் ஈடுபடுத்தினர். தமக்கு முழுவிருப்பமற்ற பெண்ணை மகன் பிடிவாதமாக மணந்ததால் தமது வெறுப்பைக் காட்டிட வெங்கட்ட நாயக்கர், திருமணத்தன்று, உணவுக் கூடத்திலேயே இருந்தனராம். அய்ரோப்பிய விருந்தினர் மணம் விசாரிக்க வந்தபோது மட்டும் வெளியே வந்தாராம். நாளடைவில் நாகம்மையாரிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தாராம். பால்யக் குறும்புகள் வாலிபப் பருவத்தில் மறைந்தா போய்விடும்? பெற்றோரின் வைதிக சனாதனப் போக்குப் பிடிக்காமல் எதிரிடையாய் நடைபோட்டு வந்த இராமசாமி, அதேபோலத் தன் மனையாளும் தன்னையே பின்பற்றி வரவேண்டுமென விரும்பியது தவறல்லவே!

மாமனார் மாமியார் வைணவ சம்பிரதாயங்களில் மூழ்கி ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள். தம் மருமகளுக்கும் ஆச்சார முறைகளை அவ்வாறே புகட்டிவிட்டனர். நோன்புகள் விரதங்கள் சடங்குகள் பூசை புனஸ்காரங்கள் அனைத்தும் கற்பித்துத் தந்தனர். இராமசாமியின் அநாச்சாரப் பழக்க வழக்கங்களால் பெற்றோர் அவரைத் தொடக்கூட மாட்டார்கள். வேண்டுமென்றே அவர் தமது தாயாரைத் தீண்டினால், தீட்டாகிவிட்டது என்று திட்டிக்கொண்டே அவர் மறுபடியும்