பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


‘ஸ்நானம்’ செய்வார். இதே பாடத்தை நாகம்மையாருக்கும் போதித்தார்கள். முடியுமா?

இராமசாமி தம் மனையாட்டியைத் தம் வழிக்குக் கொணரப் பல முறைகளைக் கையாண்டார். நாகம்மையார் மூத்தோர் ஆணைப்படி மரக்கறி உண்பவர். அவர் தலைமுழுகி விரதம் அனுஷ்டிக்கும் நாளில், தனக்குக் கட்டாயம் புலால் உணவு தேவையெனக் கணவர் அடம் பிடிப்பார். கொண்டான் குறிப்பறியும் பெண்டாட்டியோ, மாறாக நடக்க முனைவாரா? தனியே சமைத்துத் தனியே பரிமாறி வேண்டுமளவு வயிறு புடைக்க உண்ணுமளவு - அன்னாருக்குப் படைத்திட அவரை வீட்டுக்கு வெளிப்புறத்து முற்றத்திலோ தாழ்வாரத்திலோ அமர்த்திச் சாப்பிடச் செய்துவிட்டுத், தாம் பிறகு நீராடிப், பூசை முடித்துத், தனியே சைவ உணவு சமைத்துத், தமக்கு எடுத்து வைத்துக் கொண்டு உண்ணப் போவார். அதுவரை வெளிப்புறத்திலேயே பதுங்கியிருந்து, தாம் மென்று துப்பிய எலும்புத் துண்டுகளை எடுத்துவந்து, அம்மையாருக்குத் தெரியாமல் அவரது தனிச் சமையலில் மறைத்து வைத்துவிட்டு, வெளியேறுவார் இராமசாமி; அவ்வளவுதான்! இந்த எலும்பைக் கண்ட அம்மையார், அய்யோ அய்யோ எனக் கதறிப் பதறித் தமது விரதம், பதியின் சதியால் இந்தக் கதியானதே என மாமியாரிடம் வழக்குரைப்பார். தீர்ப்பு மகன் பக்கம் சாயும். மருமகள் விரதம் கைவிட ஆணைபிறக்கும். மகனுக்கு வெற்றி; இனித் தடையில்லாமல் மாமிச உணவு கிடைக்கும்!

நாகம்மையார் பழைமையில் ஊறிய பெண்தானே; மூட நம்பிக்கை, குருட்டு பக்தி இவற்றுக்கு ஆட்பட்டவர் தானே; தேர், திருவிழா, கோயில், உற்சவம் இவைகளைக் காண விருப்பம் கொண்டு கோயிலுக்குச் செல்வார். அவர் இன்னாரென்றறியாத சில முரட்டு ஆட்களை இராமசாமி கூலிக்கு அமர்த்திக்கொண்டு, அம்மையாரைக் காட்டி “அவள் நமது ஊர்க்கோவிலின் புதிய தேவதாசிப் பெண்; அவளை எள்ளி நகையாடி, ஏளனம், ஏகடியம் செய்து வாருங்கள்!” என்று தூண்டிவிட்டுத் தாம் மறைந்திருப்பார். எய்து விடப்பட்ட அம்புகள் தம் பணியை இனிது முடிப்பர். ஏவியவரோ கள்ளத்தனமாய் நகைத்து நிற்பார். காலிகளின் கண்வீச்சுக் கணைகளைக் கண்டஞ்சும் நாகம்மையார், விரைந்து வீட்டுக்கு ஓடி, இனிக் கோயிலுக்கே செல்வதில்லை என, அங்கு நல்ல பிள்ளையாய் முன்னதாகச் சென்றிருக்கும் கணவரிடம் நடந்ததைக் கூறிச், சத்தியம் செய்வார்.

மனைவிக்குக் கணவன் தாலிகட்டுவது, அவளை என்றென்றும் தனக்கு அடிமையாக வைத்துக்கொள்வதற்காகத்தான். பெண்ணடிமை தீர்வதற்குப் பெண்கள் தாலி அணியாப் பேராட்டம் நடத்த வேண்டும் என்பது இராமசாமியின் பிற்காலக் கொள்கை. இதற்கான முளை அப்போதே அவர் மூளையில் தோன்றிவிட்டது போலும்! பழங்காலப்