பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

481



10ந்தேதியன்று சிகிச்சைக்காக அண்ணா அமெரிக்கா செல்லுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் சென்னை திரும்பினார் பெரியார். நேரே குன்றக்குடி அடிகளாருடன் மருத்துவமனை சென்றபோது. ஜன சமுத்திரத்தில் நீந்தித்தான் உள்ளே செல்ல நேர்ந்தது. அடிகளார் தந்த பொன்னாடையைத் தந்தை தனயனுக்குப் போர்த்தி, நலமுடன் திரும்புக என வாழ்த்தினார். தமது மடியில் 25,000 ரூபாய் வைத்திருந்த பெரியார் அண்ணாவின் காதருகே வாயை வைத்து, அதைத் தருவதாகவும் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். அண்ணா மறுக்கமுடியாமல் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்றார். கலைஞரோ நன்றியுடன் மறுத்து, இப்போது பணம் இருக்கிறது அய்யா என்றார். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் சென்ற பெரியார், தமது சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு, விமானத்தினருகில் காரில் சென்று கொண்டிருந்த அண்ணாவைக் கண்டு கையசைத்தார். பெரியாரைக் கண்டவுடன் அண்ணா காரை நிறுத்திக் கீழே இறங்க முயன்று, கதவைக் கூடத் திறந்துவிட்டார். பெரியார் வேண்டாமெனச் சைகை செய்யவே, அண்ணா தனது இருகரங்கூப்பிப் பெரியாரை வணங்கி விடை பெற்றார்

பம்பாய், நியூயார்க் நகரங்களில் நல்ல வரவேற்புப் பெற்ற அண்ணாவுக்கு, டாக்டர் மில்லர் சிறந்த முறையில் சிகிச்சை நடைபெறுமென நம்பிக்கையளித்தார். அண்ணாவுடன் அண்ணியார், டாக்டர் சதாசிவம், மகன் பரிமலாம் இரா. செழியன், க. ராஜாராம் ஆகியோரும் சென்றிருந்தனர். 16ந் தேதி அறுவை சிகிச்சை நடைபெறும் என ராஜாராம், பெரியாருக்குக் கடிதம் எழுதியிருந்தார். 15.9.68 அண்ணா 60-வது பிறந்த நாள். “ஆனந்த விகடன்" கூடப் பாராட்டித் தலையங்கம் எழுதியிருந்தது. திருச்சியிலும், தஞ்சையிலும் இரு அண்ணா சிலைகள் திறந்து வைக்கப்பட்டன; நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கலைஞரும் நாவலரும், திருச்சியில் பெரியாரைச் சந்தித்து, முன் கூட்டியே 90-வது பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர். 17.9.68 திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் வழக்கம் போல நடைபெறும் நிறுவனர் நாள் விழாவில் பெரியார், குன்றக்குடி அடிகளார், அமைச்சர் சத்தியவாணி முத்து ஆகியோர் பங்கேற்றனர். பர்மாவில் பெரியார் 90 வது பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடக் குழுவமைத்துச் செயல்பட்டனர்.

“அண்ணாவின் அறுபதாம் ஆண்டு பிறந்த திருநாள்" என்ற பொன் மகுடமிட்டு, வைர வரிகளால் பெரியார் "விடுதலை" யில் தமது மரகதப் பேனாவினால் மாணிக்க முத்திரை பதித்திருந்தார். "அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவருடைய அறிவின் திறம்தான். தம்முடைய அமைச்சரவையில்