பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கலந்து கொள்ள இயலாதிருப்பதால், தோழர்கள் அழைக்காதிருக்கக் கேட்டுக் கொள்ளும் அறிவிப்பு, 27.8.68 அன்று பிரசுரமாயிற்று. அண்ணாவும் தளர்வு உற்றிருப்பதால் தர்மபுரியில் பெரியார் சிலை திறப்பு விழா 30.8.68 அன்று நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டதாக, என். எஸ். சம்பந்தம் செய்தி அறிவித்தார். இங்கிலீஷ் நமக்கு மிக மிக அவசியம், அதைப் புறக்கணித்தால் நமது முன்னேற்றமே தடைபடும் என்று மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் அண்ணா கருத்துரைத்தார். லாட்டரி சீட்டு நடத்தக் கூடாதென ராஜாஜி கூறுவதைத் தாமும் ஆதரிப்பதாகப் புதுப் பெரியவாள்" சி. சுப்ரமணியம் தெரிவித்தபோது, ராஜாஜியின் சுதந்தரக் கட்சியினர் ஆளும் ஒரிசா மாநிலத்தில் நடைபெறும் பரிசுச் சீட்டுகளை முதலில் ராஜாஜி தடுக்கட்டுமே, என்றார் அண்ணா , மேலும், ஆச்சாரியார் ஆண்ட காலத்திலேயே, நமது மாநிலத்தில் குதிரைப் பந்தயம் இருந்ததே! அதை அவர் ஒழித்திருப்பதுதானே என்றும் கேட்டார். மத்திய அரசு. சென்னை ராஜ்யத்தின் பெயரைத் (Tamil Nad) தமிழ்நாட் என்று மாற்றக்கோரி சென்னை அரசுக்கு அனுப்பியிருந்த தீர்மானத்தில், (Tamil Nadu) தமிழ் நாடு என்று திருத்தம் செய்து, சட்டமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றினார். அண்ணா , 17.8.68 அன்று . அமைச்சர் சாதிக்பாஷாவின் திருமணம் சென்னையில் 22.8.68 அன்று நடைபெற்றபோது பெரியார் வள்ளியூரில் இருந்து வாழ்த்து அனுப்பினார். தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராக, இணைச் செயலாளர் அந்தஸ்துடன், என்.டி. சுந்தரவடிவேலு நியமனம் பெற்றதற்குத் "தமிழக அரசைப் பாராட்டுகிறோம் " என்று "விடுதலை" யில் 4.9.68 அன்று தலையங்கம் தீட்டியது. 6.9.68 அன்று அண்ணாவுக்கு 2 முறை 'பேரியம் டெஸ்ட்' செய்யப்பட்டது. Endoscopy முறை கையாளப்பட்டு, உணவுக் குழலில் சதை வளர்ச்சி இருப்பது தெரிந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அண்ணா சென்னைப் பொது மருத்துவ மனையிலிருப்பதை அறிந்தவுடன், திருச்சியிலிருந்த பெரியார், மணியம்மையாருடன் விரைந்து வந்து, 7ந் தேதி 11.30 மணியளவில் அண்ணாவைப் பார்த்து விட்டு, “தமிழ் நாட்டின் நிதி போன்றவரை, உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறோம்" என்று அங்குள்ள மருத்துவ நிபுணர்களிடம் கூறியபின், காரைக்கால் நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டுச் சென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தைக் கூட நேரில் பெறமுடியாமல், அண்ணாவுக்காக நாவலர் சென்று பெற்று வந்தார். பாளையங்கோட்டை நகராட்சியில் பெரியார் படம் திறந்து வைத்துத் திரும்பினார் நாவலர். ராணி அண்ணியார் திருப்பதி சென்று வந்ததாக “சுதேசமித்திரன்' ஏடு செய்தி வெளியிட்டது கயமைத்தனமான பொய் என்று கலைஞர் அறிவித்தார்.