பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

479


திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம் பெற்றது) என்பன சில கருத்துகள். 7.8.68 பத்திரிகை நிருபர்களிடையே “அரச அலுவலகங்களில் கடவுளர் படம் அகற்றும் பிரச்சினையில் பதில் கூற வேண்டியவர் அலுவலர்களே தவிர, அரசியல் வாதிகளுக்கு இதிலேன் அக்கறை?” என்று கேட்டார் முதலமைச்சர் அண்ணா.

“காங்கிரஸ்காரர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள், அவர்களின் தீண்டாமை ஒழிப்பு கபட நாடகமே” என்பதைப் பெரியார் சான்றுடன் எழுதினார். “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல் - தீண்டாமை போன்றவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று, திடீர் ஞானோதயம் உண்டானவர்போல், சி.சுப்ரமணியம் கூறுகிறார். இவர்தான் சங்கராச்சாரியார் காலில் விழுந்து, பூமியை முத்தமிட்டு வணங்கித், தனக்கு மந்திரி பதவி கிடைக்குமாறு ஆசி கோரியவர் மேலும், இவரது தலைவரும் குருவுமான ஆச்சாரியார் சங்கதி என்ன தெரியுமா? ராஜாஜியாரையும் தொடுவார், யார் வீட்டிலும் சாப்பிடுவார், யாருக்கும் பெண் கொடுப்பார், ஆனால் ஜாதி ஒழியச் சம்மதிக்க மாட்டார்! தான் பிராமணன், மற்றவர் சூத்திரர் என்பதைச் சொல்லி, ஜாதி தர்மத்தைக் காப்போம் என்பார்.

1963க்குப் பிறகு காமராஜர் தொடர்பு தமிழ் நாட்டில் இல்லாமல் போய்விட்டது. காமராஜர் இல்லையென்றால் காங்கிரஸ் அநாமதேயந்தான். கல்விக் கண்கொடுத்ததற்குப் பரிசாக இன்று காமராஜரையே குறை சொல்கிறார்கள். அவரும் நமது பொது எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவர் காலத்தில் காங்கிரசுக்குப் பெருமை குறையாதிருக்க, அவர் சார்புள்ள பத்திரிகைகளை அடக்கிட வேண்டும்” என்று பெரியார், விட்ட குறை தொட்ட குறையோ என்னவோ; இவ்வாறும் எழுதினார்.

ஆகஸ்டு மாதம், நிறையத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெரியார் பெண்கள் முன்னேற்றதுக்கான அறிவுரைகளை வழக்கம் போல் வழங்கினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசிகள் ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சட்ட மன்றத்தில் பேசியபோது, சத்தியமூர்த்தி அய்யர். அதை எதிர்த்து, “அப்படியானால் கடவுளுக்கு சேவை செய்ய தேவதாசிகள் வேண்டுமே என்ன செய்வது?” என்று கேட்க, “எங்கள் சமூகத்தார் ஆண்டாண்டு காலமாய்ப் பொட்டுக் கட்டியிருந்தோம். இனிமேல் அந்த வேலையை உங்கள் சமூகத்துப் பெண்கள் செய்தால் தெய்வ வேலையாயிருக்குமே” என்றாராம். அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கம் சட்ட விரோதமாக்கப்பட்டது போல், பெண்களுக்கு இப்போது தாலி கட்டுகின்ற வழக்கமும் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.

தந்தை பெரியார் உடல் நலங்குன்றியிருக்கிறார்கள். எனவே ஏற்கனவே ஒப்புதல் தந்துள்ள நிகழ்ச்சிகள் தவிரப் புது நிகழ்ச்சிகளில்