பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அல்ல, ஆகவேண்டியவர்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதன் பலன் இதற்காகவாவது இந்தப் படங்களை அப்புறப்படுத்தவாவது) பயன்பட்டது என்று இருக்க வேண்டாமா?

நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும் படிச் செய்தீர்கள் ஆனால், பிறகு உங்கள் கதி என்ன ஆவது? நானும் இனியும் (90க்கு மேல்) வாழமுடியுமா? எனக்கு அப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள்? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள். எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள்! நீங்கள் பழைய நிலைக்குதான் போக வேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள் பரிசாக இதையாவது செய்யுங்கள்; செய்து காட்டுங்கள் என்று வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள்!" - எப்படி? எதிரில் உட்கார்ந்து நம்மிடம் பேசுவது போல் இல்லையா?

19.9.68 அன்று பெரியார் வாலாஜாபாத் கூட்டத்தில் “மக்களுக்கு அறிவிருந்தால் தங்களை இழிவு படுத்தும் கோயில்களைத் தரைமட்டமாக்கி இருக்கமாட்டார்களா? நம்மை நிரந்தரமாய் இழி மக்களாகவே வைத்திருக்கத்தானே கோயில்கள் இருந்து வருகின்றன!" என்று பேசினார். அதே நாளிட்ட “விடுதலை” தலையங்கப் பகுதியில் "எனது கொள்கை, ஆதரவு மாற்றத்திற்குக் காரணம்" என்ற தலைப்பில் "எனது ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆகவேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக் கூடாது - இந்த மூன்றுதான் எனது கொள்கை. பல கட்சிகளை எதிர்த்ததும், பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனியும் எந்தக் கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ தெரியாது" - என்று எழுதி முடித்தபின், அடியில் 'குறிப்பு' என்று போட்டு, “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால் என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது" எனவும் எச்சரிக்கை போல எழுதியிருந்தார் பெரியார்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947, இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது 7.12.1947. காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 முன்னது நடைபெற்ற 165-வது நாள், பின்னது அறிவிக்கப்பட்ட 53வது நாள், காந்தியார் கொல்லப்பட்டு விட்டார். ஏன் தெரியுமா? சுதந்திரத்துக்குப் பின் பார்ப்பனர் நடத்தையைப் பார்த்து காந்தியும் சு.ம. ஆகிவிட்டார். அதனால்தான் தீர்த்துக் கட்டி விட்டார்கள் எனப் பெரியார் பெட்டிச் செய்திபோல ஒரு புள்ளிவிவரம் தந்து சிந்தனையைத் தூண்டி விட்டார்!