பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

485



20.9.1968 வேலூரில் எம். ஜி. ஆர். மன்றத்தின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசினார். எம்.ஜி.யாரின் நூறாவது பட நிறைவு விழாவாகவும் இது நடைபெற்றது. "நான் தோற்றுவிட்டேன், பார்ப்பான் வெற்றி பெற்று விட்டான்; என்றாலும் கழகத் தோழர்கள் அவசரப்பட வேண்டாம்; இவர்களை ஒழிக்கும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள் என்று 1967-ல் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றவுடனே சொன்னேன். சொன்ன வண்ணம் தான் பெரிய போராட்டம் துவக்குவேன் என்று எதிர்பார்த்த தி. க. தோழர்கள் ஏமாந்தார்கள், காரணம், கிடைத்தற்கரிய நிதியாக அண்ணா நமக்கு வாய்த்துவிட்டார். பகுத்தறிவோடு காரியங்களைச் செய்து வருகிறார். அதே போலக் கலைத் துறையிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு விளக்காக இருந்து வருகின்றார். நான் இவருடைய திறமையைப் போற்றுவேனே தவிரத், தொண்டினைப் போற்றுவது என்பது கிடையாது. ஏனெனில், நம் நாட்டில் சினிமாவானது அறிவை வளர்க்காமல், உணர்ச்சியைத்தான் தூண்டுகிறது. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. சம்பாதித்தது போதும் என்று, இவர் மக்களுடைய அறிவை வளர்க்க சிந்தனையைத் திருப்ப, இனிமேல் பாடுபட வேண்டும்" என்பதாகப் பெரியார் தமது உள்ளக் கிடக்கையைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்திக் காண்பித்தார்.

தமிழ் நாடெங்கும் பெரியார் பிறந்த நாளும், அண்ணா பிறந்தநாளும், தனித்தும் இணைத்தும் பெருமெடுப்பில் நிகழ்த்தப்பெற்று வந்தன. போளூர் தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்தநாள் விழாவில் 21ந் தேதி பேசிய பெரியார் தி.மு.க. நீடித்து இருந்தாக வேண்டும். இவர்கள் சட்டத்திற்கு உட்பட்டே ஆட்சி செய்யட்டும். மற்ற பிரச்சினைகளை நாம் பார்த்துக் கொள்வோம். காங்கிரசார் இந்த ஆட்சியைக் கவிழ்த்திடச் செய்யும் எந்த முயற்சிக்கும் நாம் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது" என்று வலியுறுத்தினார். புதுக்கோட்டையிலுள்ள மன்னர் கல்லூரியில் மாணாக்கர்கள் மத்தியில் பெரியார் பேசும் போது “நமது சமுதாயத்தைப் பிடித்திருப்பது மிகக் கடுமையான நோயாகும். அந்தக் கடுமையான நோய்க்கு ஏற்பவே நானும் கடுமையான மருந்து கொடுக்கிறேன். நம் நாட்டு மனித சமுதாயம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி போலத்தான் காணப்படுகிறது. ஆகையால் பேதமற்ற, கவலையற்ற ஒரு நிலையடையக் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். மனிதன் எதற்காகக் கடவுளை வணங்குகிறான்? எதற்காகப் பக்தி செலுத்துகிறான்? தனது தகுதிக்கு மேற்பட்ட பதவியோ பலனோ அடைய வேண்டும் என்கிற பேராசைதானே காரணம்? கடவுள் நம்பிக்கை என்பதே ஒருவர்மீது மற்றவரால் திணிக்கப்படுவதே ஆகும். கடவுள் பிரார்த்தனை