பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

487



7.10.68 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு செகந்தராபாத்தில் 9-ந் தேதி தங்கி, அங்கு பத்திரிகையாளரிடம் பேட்டியளித்து, 12-ந் தேதி லக்நோ சேர்ந்தார். அங்கே உத்தரப் பிரதேச மாகாணத்தின் தாழ்த்தப்பட்டோர்- பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் மாநாட்டைத் துவக்கி வைத்து ஆராய்ச்சி மிக்க அரிய கருத்துரைகள் வழங்கினார். பெரியாரின் தமிழ்ப் பேச்சை வீரமணி ஆங்கிலத்தில் தர, அதை இந்தியில் மொழி பெயர்த்து அப்பகுதி மக்களுக்குச் சொன்னார்கள். திரும்பவும் வழியில் ஐதராபாத்தில் இருநாள் தங்கிய பின், 20.10.68 இரவு பெரியார் குழுவினர் சென்னைக்குத் திரும்பினார்கள். இதற்கிடையில், அண்ணா ஓரளவு நலம் பெற்றுப் பூங்காவில் உலவினார்; பொருட்காட்சி பார்த்தார் என்றெல்லாம் செய்திகள் கிடைத்தன. 19ந் தேதி கிடைத்த செய்தியில், பசியின்மையும் களைப்பும் இருப்பதாகவும், எனினும், அதைப் பொருட்படுத்தாமல் அண்ணா, மாநகராட்சித் தேர்தல்கள் சென்னையில் எப்படி நடைபெறுகின்றனவோ எனக் கவலை கொண்டதாகவும் தெரிந்தது.

பெரியார் 90-வது பிறந்தநாள் மலர், நியூயார்க் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் பெரியாரின் சில கட்டுரைகளைப் படித்தவுடன், தனது எண்ணங்களைப் பெரியாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் வடித்திருந்தார் அண்ணா: பேரன்புடைய பெரியார் அவர்களுக்கு வணக்கம். என் உடல் நிலை நல்ல விதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும் இளைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இந்தத் திங்கள் முழுவதும் இங்கு இருந்துவிட்டு, நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம், செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். சென்னை மருத்துவமனையிலும், விமானதளத்திலும் தாங்கள் கவலையுடனும் கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என்முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவே தான், கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன், தங்கள் அன்புக்க என் நன்றி. தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில், மனச்சோர்வுடன், துறவியாகிவிடுவேனா என்னவோ, என்று எழுதியிருந்ததைக் கண்டு, மிகவும் கவலை கொண்டேன். தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை, மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்த வாதிக்கும் கிடைத்ததில்லை; அதுவும் நமது நாட்டில்! ஆகவே சலிப்போ, கவலையோ, துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை.