பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கிடையாது. ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதற்கும் எந்தத் திட்டமும் - இந்து மதம் என்பதற்கே கிடையாது!

எங்கள் தோட்டத்தில் மட்டுமே பூக்கக்கூடிய சண்பகப்பூ மனோரஞ்சிதப் பூவை மாலைகட்டி, சாமிக்கு அனுப்புவேன்; அது இரவில் தாசிகளின் தலையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படி வந்தது? அர்ச்சகர் 'மாமா' வேலை பார்ப்பவராயிருப்பார்!

எனவே, ஆட்சியாளர் இதைப் பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

அடுத்த நாள் இழிவு நீக்கக் கிளர்ச்சி என்ற தலைப்பு:- சூத்திரர் என்கிற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியல் காரியமே தவிர இதில் அரசியல் (பொலிடிகல்) ஏதுமில்லை , பலாத்காரமும் இதில் ஏதுமில்லை .

நம்நாட்டில் 100க்கு 97 பேராயுள்ள படித்தவர்கள், செல்வவான்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், துணைவேந்தர்கள், மடாதிபதிகள், மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள் ஆகிய யாராயிருந்தாலும் சமுதாயத்தில் கீழ்பிறவியாக, கீழ்மக்களாக, அவர்களுடைய கடவுள் என்கிற சிலையிடம் கூட நெருங்கக்கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரமான இழிவுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகக், கிளர்ச்சி செய்வதென்றால் - இதுவரை செய்யாமல் இருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறும் ஆகுமே ஒழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும், ஒருவிதத்திலும், தவறாகவோ கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது!

நீக்ரோக்களுக்கும் வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவி பேதம் நிறபேதம் நாகரிகபேதம் - நமக்கும் பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள - மைனாரிட்டியான நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் ஜாதியான, பிரபுக்களான, வெள்ளையரோடு எல்லாத் துறைகளிலும் சரிசமமாய்க் கலந்து, உண்பன, உறங்குவன, பெண்கொடுக்கல், வாங்கல்; உட்படக் கலந்து புழங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு 3 பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும், உழைக்காததையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்ப் - பிழைப்பாய்க் கொண்ட கூட்டம், மற்றும் வாழ்வில் யோக்கியமாக நேர்மையாக நாணயமாக இருக்க வேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும், தாங்கள் எது வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அனுபவத்தில் இருக்கின்ற கூட்டம், தங்களை