பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

525


மேல் பிறவி என்றும், நாம் கீழ்ப்பிறவி என்றும் பொது இடமாகிய கடவுள் என்னும் கல்சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக்கூடாத, மிகமிக இழிதன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நம்பேரில் ஏற்றிவைத்து. அறைக்கு வெளியில் நின்று வணங்கவேண்டும் என்பதை நிலைக்க விடலாமா? என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.

மேலும், குருக்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாத சைவர்கள் என்பதற்கான ஆதாரங்களுமிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியார் தான் பூசாரியாக இருக்க வேண்டுவென்கிற நிபந்தனை எந்த ஆதாரத்திலுமில்லை; குருக்கள் அர்ச்சகர்கள் வீட்டில் மற்றப் பார்ப்பனர்கள் சாப்பிடவோ, பெண் கொடுக்க, எடுக்கவோ மாட்டார்களாம். அந்த நிலையிலிருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்துக்கள், பார்ப்பனரல்லாதவர் மட்டும் - நுழையக் கூடாது என்றால் அது எப்படி, நியாயமாகும்?

நாம் மூலஸ்தானத்திற்குள் செல்லலாம்; ஆனால் சிலையைத் தொடக் கூடாது என்று வேண்டுமானாலும் திட்டம் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் நெருங்கக் கூடாது; அறையின் படியைத் தாண்டக் கூடாது என்பது என்ன நியாயம்?

எனவே, இந்தக் கர்ப்பக்கிரகம் என்கிற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை இழிமக்கள் என்றாக்கப்படுவதற்காகத்தான் இருந்து வருகின்றன. வேறு எந்தப் புனிதத் தன்மையும் பாதுகாக்க அல்ல. நாம் உள்ளே சென்று வணங்குவதால், எந்தப் புனிதத் தன்மையும் கெட்டுவிடாது; இருந்தாலும் கெடுக்க வேண்டுமென்கிற எண்ணம் நமக்கு இல்லவேயில்லை.

நமது இழிவு நீக்கப்படவேண்டும் என்கிற ஒரே காரியத்திற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். உடனே பெயர் கொடுங்கள்!"

கரூர்வட்ட திராவிடர் கழக மாநாடும், சமூக சீர்திருத்த மாநாடும் 26-10-69-ல் நடைபெற்றன. வீரமணி தலைமை ஏற்க, செல்வி தன்மானம் பி.எஸ்.சி. கொடி உயர்த்த, செல்வேந்திரன் திறந்துவைக்க, அமைச்சர் ப.உ. சண்முகம், பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்ற, மாநாடுகள் முடிவுற்றன. 27-ந் தேதி "விடுதலை"யில் பாராட்டத்தக்க நியமனப்பகுதியில் வந்த செய்தி ஒன்று:- தமிழக அரசின் பிரச்சார அதிகாரியாக கவிஞர் திரு. கருணானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் ஆற்றல் உள்ளவர். "குடி அரசு" போன்ற ஏட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே, துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.