பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

527


பிரசுரமானது. 16-11-69 திருச்சியில், தி.சு. மத்திய நிர்வாகக் கமிட்டியில், இழிவு நீக்கக் கிளர்ச்சிக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. பெரியார் தலைவர், வீரமணி செயலாளர், புலவர் கோ. கமயவரம்பன் பொருளாளர், டி.டி. வீரப்பா , அ. ஆறுமுகம், து.மா, பெரியசாமி உறுப்பினர்கள். 1970 ஜனவரி 26-ந் தேதி இழிவு நீக்கக் கவர்ச்சி துவக்கப்படும் நாள்; களமாக மன்னார்குடி தவிர, மற்ற ஊர்களையும் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்; அதுவரையில் இடையிலுள்ள நாட்களில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்; தேவைப்பட்டால் எதிர் வழக்காடலாம்; கிளர்ச்சியைக் கைவிடுமாறு தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய கடிதத்தை ஏற்க முடியாமைக்கு வருத்தந் தெரிவித்தல் - ஆகிய முக்கியமான தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பாராட்டத்தக்க நியமனங்கள் பகுதியில், 13-11-69 “விடுதலை”யில் இடம் பெற்றவை:- இ.பி. ராயப்பா முதல் அய்.ஏ.எஸ். அதிகாரியாகத் தலைமைச் செயலாளரானார்; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பாலசுந்தரம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவரானார்; எஞ்சினிர் கே.ஆர். ராதாகிருஷ்ணன் மின்வாரியத் தலைவரானார்.

“காங்கிரஸ் பிளவுக்குக் காரணம் இந்திராகாந்தி செய்த தவறுதான். அதிகார பலத்தை வைத்துக்கொண்டு ஸ்தாபனத்தைப் பாழ்படுத்தி விட்டார். பதவியில்லாவிட்டால் தம்மால் வாழமுடியாது என்று கருதுகின்றவர்களுக்கு இனிக் காங்கிரஸ் கட்சி பயன்படாது. இந்திரா காந்தியை ஆதரிப்பதாகச் சொல்கின்ற தி.மு.க. நிலை சரிதான். தங்கள் ஆட்சிக்குக் கேடில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்” என்று பெரியார் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டார். 28-ந் தேதி ”விடுதலை“யில் தலையங்கம் மூலமாகவும், ஒரு பெட்டிச் செய்தி மூலமாகவும் பெரியாரின் வேண்டுகோள் ஒன்று பிரசுரமாகியிருந்தது. “ஜனவரி மாதத்திலிருந்து ‘உண்மை’ என்னும் மாத சஞ்சிகை, 25 காசு விலையில், புவலர் கோ. இமயவரம்பனை ஆசிரியராகக் கொண்டு, திருச்சியிலிருந்து வெளிவரும், நிறையச் சந்தா எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஆங்கிலத்திலும் அதேபோல ஒரு இதழ் ஆரம்பிக்கும் ஆசையும் இருக்கிறது” என்பதுதான் விஷயம்.

5-12-69 அன்று அமைச்சர் ஓ.பி. இராமன் திருமணம். அதன் பொருட்டுத் திருச்சி வந்த முதல்வர் கலைஞர், தம் குடும்பத்தாருடன் பெரியாரைக் காலை 9 மணிக்குச் சந்திந்தார். அப்போது ஈரோடு மருத்துவமனை விரிவுக்காக என்று, பெரியார், முதல்வரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். 5-ந் தேதி பெரியார் அண்ணாமலை நகரில் பொதுக் கூட்டத்தில் பேசினார். 13-ந் தேதி மதுரை நகர மன்றத்தின் சார்பில், தலைவர் எஸ். முத்து பெரியாருக்கு வரவேற்பளித்தார். அன்றைய தினம் துவங்கப்பட்ட அண்ணா பேரவையில்