பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

551


செய்யப்பட்டிருந்தது. திடீர்ப் பிள்ளையார் பிரச்சினை குறித்துப் பெரியார் பேசுவதாகவும் அறிவிப்பு, திடீரென்று பெரியார் வேலூர் மருத்துவமனை சென்று, tube பொருத்திக்கொண்டு, அப்படியே 13-ந் தேதி தர்மபுரி நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டு விட்டார்; அதனால் 12-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்தி தரப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்தக் கூட்டம், பின்னர் மூன்றாண்டு கழித்து நடந்தது. பெரிய வரலாற்றுச் சின்னமாகவே ஆகிவிட்டது. காரணம், அது நடைபெற்ற தேதி 19-12-1973 ஆகும். இப்போது திடுமென ஒத்திவைக்கப்பட்டதற்குக் காரணம், கூட்டம் நடத்துவோர் பேசுவோர் இருவருக்குமே, அரசுத் தரப்பிலிருந்து ஏதோ நெருக்கடி தரப்பட்டதாக, மக்களிடையே கருத்துப் பரவியது!

திருவரங்கம், திருவானைக் கோயில் முதலிய ஊர்களில் ‘பிராமணாள்’ எழுத்துகளை அழிக்குமாறு எச்சரிக்கை தரப்பட்டது. 16-ந் தேதியே வெற்றி பெற்றுவிட்டது! 27-10-70 முதல், பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்கரிப்போர் பட்டியல் தொடர்ச்சியாக "விடுதலை"யில் வெளிவந்தது. நாள்தோறும் வளர்ந்து வந்த இந்தப் பட்டியலின் புள்ளி விவரம் படிக்கச் சுவையானதாகும்:- 23-11-70-ல் 1005 பேர், 23-12-70-ல் 1503 பேர், 17-1-71-ல் 2014 பேர், 23-2-71-ல் 2509 பேர், 20-3-71-ல் 3000 பேர், 4-4-71-ல் 3500 பேர், 15-4-71 -ல் 4014 பேர், 25-4-71-ல் 4518 பேர், 7-5-71 -ல் 5037 பேர், 24-5-71-ல் 5528 பேர், 15-6-71-ல் 6001 பேர், 12-7-71 6501 பேர், 9-8-71-ல் 7005 பேர், என்று நீண்டுகொண்டே போயிற்று!

28-10-1970 பிற்பகல் 2-15 மணிக்குப் பெரியார், மணியம்மையார், வீரமணி, என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் வேனிலும், தஞ்சை கா.மா. குப்புசாமி முதலியோர் இன்னொரு தனிக்காரிலும் பம்பாய் புறப்பட்டளர். சிவ சேனையின் பிறப்பிடத்திலேயே - சிங்கத்தின் குகையிலேயே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்துக் குலுக்குவது போல் - அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளப், பெரியார் பெரும்படை அணி திரண்டது. பம்பாயில் வழியெங்கும் வரவேற்புகள். மேடையில் பெரியாருக்கு மாலைகள் சூட்டி முடிக்கவே 30 நிமிடங்கட்கு மேலாயிற்று. பி.என். ராஜ்போஜ் தலைமை ஏற்றுப், “பெரியார் நாட்டில் செய்த பெரிய புரட்சிகரமான பணிகளால், தமிழ் நாட்டில் இந்து மதத்தின் பிடி தளர்ந்து, அதன் காரணமாக இப்போது அங்கே அண்ணாவின் ஆட்சியும், நடைபெற முடிகிறது" என்றார். டாக்டர் பொராலோ பெரியார் படத்தைத் திறந்து வைத்து, இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி நடப்பது தமிழ் நாட்டில் மட்டுந்தான் எனப் புகழ்ந்தார். தொல்காப்பியன், நன்னிலம் அ. நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.