பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

550

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சிலையைத் திறந்த முதலமைச்சர் கலைஞர், "பெரியார் எப்போதுமே தேவை" என்றார், பெரியார் பேசும்போது, “பகுத்தறிவுக் கொள்கைகள் நாடெல்லாம் பரவிட, தெருவுக்குத் தெரு ஒரு பகுத்தறிவாளர் சிலை நிறுவப்பட வேண்டும்" என்றார்.

திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 26-ந் தேதி நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில், பெரியார், வீரமணியுடன், அமைச்சர்கள் க. ராஜாராம், செ. மாதவன் ஆகியோர் பங்கேற்றனர். 27-ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகச் சார்பில் பெரியாருடன், அமைச்சர் என்.வி. நடராசன், ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பேசினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டே, பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி - உத்தியோகங்களில் 49 சதவீதம் ஒதுக்கிட, இப்போதே இடமிருப்பதாகத் தாம் கருதுவதாகப் பெரியார் தெரிவிக்கவும்; அமைச்சர் என்.வி.என். அவ்வாறாயின் பெரியார் கருத்தை ஏற்பதாக அறிவித்தார். (பின்னர் கலைஞர் அவ்விதமே ஆணை பிறப்பித்தது வரலாறாகும்!) பன்மொழிப் புலவரும் தனித்தமிழ்ச் சான்றோரும் சிறந்த ஆராய்ச்சி நிபுணருமான ஞா. தேவநேயப் பாவாணர், அன்று திருச்சியில் பெரியாரைப் பற்றி ஒரு வெண்பா இயற்றிப் பாடினார்:-

பைந்தமிழ் நாட்டுப் பகுத்தறிவுத் தந்தையென
அய்ந்து கண்டத்தும் அரும்பெயரை - மைந்துடனே
தொண்ணூற் றிரண்டாம் தொடராண்டும் நாட்டிய நீ
எண்நீட்டி இங்கே இரு

வானொலி நிலையங்களிலும் இனி மதராஸ் என்பதற்குப் பதிலாகச் சென்னை என்றே சொல்லப்படுமென முதல்வர் கலைஞர் 29-9-70 அன்று அறிவித்தார். கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருமெனவும் முதல்வர் 2-10-70 காந்தியடிகள் பிறந்த நாள் விழாவில் அறிவித்தார்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கெல்லாம் இனி அண்ணாத்துரை என்றே பெயரிடுமாறு எழுமலை என்னும் ஊரின் பொதுக் கூட்டத்தில் பெரியார் கேட்டுக் கொண்டார். தியாகராய நகரில் திடீர்ப் பிள்ளையார் ஒன்று திடுமெனக் கிளம்பிய மோசடி பற்றிப் பெரியார் புதுவையில் பேசும் போது, சாணக்யன் கற்றுக் கொடுத்த ராஜதந்திர முறைதான் திடீர்ப்பிள்ளையார். அரச வருமானத்தைப் பெருக்க அவன் சொல்லிக் கொடுத்த தந்திரத்தைப், பார்ப்பனர் தமது வருமானம் பெருக இப்போது கையாள்கின்றனர் என்றார். 12-10-70 அன்று, தியாகராயநகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில், கவிஞர் சுரதா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் தியாகாய நகர் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு