பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

549


பழிவாங்கும் ஆட்சியாய்த்தான் இருக்கும்! அல்லது, அசல் காலித்தன, பலாத்காரத் தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதை எனது 91 ஆண்டு அனுபவச் செய்தியாகக் கூறுகிறேன்!

நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாகப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகிஷ்கரிக்கும்படிச் செய்ய ஓர் இயக்கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன். ஆத்திரப்படுகிறேன்.

இதற்காக மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்வது கூடுமானவரை எல்லா கிராமங்களிலும் ‘நம் எதிரிகளின் பத்திரிகை பகிஷ்கார சங்கம்’ என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும்; இந்தக் காரியத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதும்; பல தொண்டர்களை ஏற்பாடு செய்து முழுநேர வேலையாக நாடெங்கும் பணியாற்றச் செய்வதும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்.

கண்டிப்பாய் இதற்கு எல்லாரும் நன்கொடை அளித்தாக வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும், உதவவேண்டும். நண்பர் வீரமணியிடம், நன்கொடை அளிப்பவர்கள் இரகசியமாகத் தரலாம். நன்கொடையாளர்களின் பெயர்கள் கண்டிப்பாய்த் தெரிவிக்கப்படமாட்டாது.

இந்தப் பணியானது, கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியை விடக், கோயில்களை இடிக்கும் பணியைவிட, முக்கியமானதும் பயனளிக்கத் தக்கதுமாகும் என்பது என் உறுதியான எண்ணமாகும். இந்தக் காரியத்தைச் செய்வதால் எனது வாழ்நாளில் ஒரு பயனுள்ள காரியத்தை நான் செய்ததாகக் கருதிக்கொண்டு முடிவடைவேன்.

மேலும், இப்போது நமக்கு வேண்டியதெல்லாம், இன்னும் பகுத்தறிவும் ஒற்றுமையும் இன உணர்ச்சியும் ஆகும். நமது அதிகாரிகளும், ஆட்சிச் சிப்பந்திகளும், பொதுமக்களும் தங்கள் சுயநலங்களில் சிறிது விட்டுக்கொடுத்தாவது, தமிழர்க்கான பொது நல்வாழ்வுக்காக ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்."

20-9-70 அன்று சேலத்தில், ஜி.டி. நாயுடு தலைமையில் எஸ். சந்திரசேகர் பெரியார் சிலையைத் திறந்து வைத்து, “மூடநம்பிக்கை சாதி ஒழிப்புக்குப் பாடுபடும் 92 வயது இளைஞர் பெரியார்' என்று பாராட்டினார். வருகை தந்திருந்த பெரியார், “பார்ப்பனப் பத்திரிகைகள் வாங்கும் தமிழர்களைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த என் சிலை உங்களைப் பார்த்துப் பேசுவது அதுதான்" என்றார். 25-ந் தேதி திண்டுக்கல்லில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியார்