பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

553


ஜனநாயகமும் இந்திய மக்களுக்கு உயிர்நாடி. இந்திராகாந்தி உதவியுடன் கம்யூனிசம் இவை இரண்டுக்கும் பேராபத்தை விளைவிக்கிறது என்று “சுயராஜ்யா” இதழில் இராஜாஜி பிரலாபிக்கிறார். இவருடைய அழுகையை நாம் மதிப்பதா? கம்யூனிசம் வெற்றி பெறப் பாடுபடுவதே நம் கடமையாகும்? அதற்காகவே நாம் இந்திராவை ஆதரித்திட வேண்டும் (பார்ப்பனர் தவிர்த்து), எவ்வளவு பெரிய திருட்டு அயோக்கியனும், மேல் ஜாதிக்காரனாக, எஜமானனாக, முதலாளியாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இராஜாஜியிசமா?" எனப் பெரியார் வினவினார்.

நாடெங்கும் பகுத்தறிவாளர் கழகம் ஏற்படுத்துங்கள். கொள்கையை அனுசரிப்பதில் கண்டிப்பாயிருங்கள். நெற்றிக்குறி மதச் சின்னம் அணியாதீர்கள். உறுப்பினர் குறைவானாலும், பகுத்தறிவாளர்களையே உறுப்பினர்களாய்ச் சேருங்கள் - என்று பெரியாரின் பெட்டிச் செய்தி வேண்டுகோள் வெளியாயிற்று. 30-11-70-ல் “தமிழர் நிலை" என்ற பெரியாரின் தலையங்கம் ஆழ்ந்த கவலையோடும் பொறுப்போடும் தீட்டப்பட்டிருந்தது:- “தமிழ் நாட்டில் இன்று தன் காலில் நிற்கும் தமிழன் கட்சி ஒன்றுமில்லை . காமராஜரும் நிஜலிங்கப்பாவும் தங்கள் கட்சியோடு போய் இராஜாஜியிடம் சரணடைந்து விட்டார்கள். நடிகர் ஒருவரை மக்கள் கடவுளாகக் காண்கின்றார்களாம். தி.மு. கழகத்துக்குக் கஷ்டம் வருமானால் நிச்சயமாக அது வெளியிலிருந்து வராது. என்னதான் திராவிடர் கழகத்தை அவர்கள் மதிக்காவிட்டாலும், கோபுரம் தாங்கும் பொம்மைபோல் என்னை நானே நினைத்துக்கொண்டு, குடும்பஸ்தனைப் போலப் பெரிய கவலையோடு, தி.மு. கழகத்தை ஆதரிக்கிறேன் என்பதில் மாற்றமில்லை ! கலைஞர் கருணாநிதி அவர்களின் புத்திசாலித் தனத்தைப் பற்றி நிறையப் படித்து வருகிறோம். அடுத்தபடியாகவும் இவர் ஆட்சி வந்தால்தானே வேலை. இல்லாவிட்டால் தமிழ் நாடே சூத்திர நாடாகிவிடுமோ!” என்றெழுதினார்.

எல்லா வகுப்பாருமே பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்கிற மசோதாவை, அறநிலையத் துறை அமைச்சர் கே.வி. சுப்பய்யா 30-11-70-ல் சட்டமன்றத்தில் முன் மொழிந்தார்; 2-12-70 அன்று எதிர்ப்பின்றி அம்மசோதா நிறைவேறியது. பகுத்தறிவாளர் கழகம், சொசைட்டி ஆக்டின்படி 2-12-70 அன்று பதிவு செய்யப்பட்டது. “ஆச்சாரியார் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்கவோ ஒழிக்கவோ தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டத்தை ஆயுதமாக எடுத்தாளப் பார்க்கிறார். அதற்கு ஆட்சியாளரும் இடந்தரக் கூடாது. எனக்குத் தமிழ்மீது வெறுப்பில்லை. நான் வீட்டிலும் வெளியிலும் பேசுவது தமிழ். படிப்பது தமிழ். எழுதுவதும் தமிழ். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று, சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ்,