பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகின்றது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை . ஆகையால் தமிழில் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாக அரசு கூறவேண்டியதாகிறது. இது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் இதைச் சாக்காக வைத்து, ஆட்சியை எதிர்க்கிறார்கள். இனி காங்கிரஸ் ஆட்சி வந்துவிட்டால் என்ன செய்வது? என்னால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை . எப்படிப் போராடுவது?" என்று பல அய்ய வினாக்களை, “நமது கடமை” என்ற தலைப்பின் கீழ்த் தாமே எழுதிய "விடுதலை" டிசம்பர் 1-ந் தேதி தலையங்கவாயிலாகப் பெரியார் உருவாக்கினார். சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு 20-12-70-ல் நடைபெறும் என 4-ந் தேதி ஒரு செய்தி வந்தது; பிறகு, ஜனவரி 16, 17-ல் நடக்கும் என 8-ந் தேதி திருத்தமான செய்தி; கடைசியாக 1971 ஜனவரி 23, 24 என ஒரு முடிவான செய்தி! சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு பார்ப்பனரல்லாதார் ரெவின்யூ போர்டு முதல் உறுப்பினராக 9-12-70 முதல் நியமிக்கப்பட்டார். அவர் பி. சபாநாயகம் அய்.ஏ.எஸ்.

பெரியார் ஆத்தூரில் 3-12-70-ல் பேசும் போது, “பகுத்தறிவாளர் என்றால் அவர்களுக்கு நாடு, மொழி, இன்ன ஆட்சி என்பது போன்ற பற்று பாசம் இருக்கக்கூடாது. ஆனால் நாட்டால், மொழியால், ஆட்சியால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்க்கவேண்டும்" - என்றார். கண்ணை மூடிக்கொண்டு நாம் யாவரும் முனிசிபல் தேர்தல்களில் தி.மு.க. கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று எழுதினார் பெரியார். கவிஞர் கண்ணதாசன் ஒரு சுவையான செய்தி தெரிவித்ததாக “விடுதலை" 11-12-1970 ஏடு தெரிவித்தது. தமிழ் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று மூன்றாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் காமராசர். இப்போது ஏன் எதிர்க்கிறார் என்பது அரசியல். அப்போது தமிழ் பயிற்று மொழி என்பதை “தினமணி", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏடுகள் எதிர்த்தபோது, “இந்தப் பாப்பாரப் பையங்க ஆங்கிலம் இருந்தால்தான் தங்க கையில் ஆதிக்கம் இருக்கும்னு பாக்கிறாங்க, படிச்சா தமிழ் படி; இல்லைனா இந்தி படின்னு சொல்லிப் போடுவோம்” என்றாராம் காமராசர்,

12-ந் தேதி சிண்டிகேட் காங்கிரஸ், சுதந்தரா, ஜனசங்கம் ஆகிய கட்சிகளின் கடையடைப்பு ஹர்த்தால் வேண்டுகோள் தோல்வியுற்றது. "எதிர்க் கட்சிகளின் நிலை" என்ற தலையங்கத்தில் பெரியார் அபாய அறிவிப்புத் தெரிவித்தார்; “காமராசரிடம் இப்போது ஆட்களே இல்லை. இருப்பதெல்லாம் கக்கன், சம்பத்து, சிவாஜிகணேசன் இவர்கள் தவிரச், சரியான கொலைபாதகக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். பத்திரிகை வசதியும் கிடையாது. எல்லா யோசனைகளுக்கும் ஆச்சாரியார்தான். ஆகையால் பொது மக்களே! மாணாக்கர்களே!