பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


அய்யமில்லை ! சாதி, மத, கட்சி வேறுபாடில்லாமல், அறிவுக்குப் பிரதானம் கொடுத்து, நாடும் சமுதாயமும் முன்னேற வேண்டும்!" ("விடுதலை" முதல்பக்கப் பெட்டி 1.1.72)

2.1.72 அன்று தஞ்சையில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி நடந்த விழாவில், தோழர்கள் திரட்டிய 93 கிராம் தங்கம் சி.பி. சிற்றரசு வாயிலாகவும், தோழர் கா.மா. குப்புசாமி அளித்த ரூபாய் 2,000, மதுரை மேயர் முத்து மூலமாகவும் பெரியாரிடம் வழங்கிடப் பெற்றன. எஸ். இராமச்சந்திரன் தலைமையில் பல்லவன் போக்கு வரத்துக் கழகத்தை முதல்வர் கலைஞர் 3-1-72 அன்று தொடங்கி வைத்தார். முதல்வர் திரட்டும் ரூ. 10 கோடி தேசப் பாதுகாப்பு நிதிக்கு, எல்லோரும் தாராளமாக உதவுங்கள். மாவட்டந்தோறும் 2 கோடி 1 கோடி என்று வழங்கிடுங்கள் என்பதாகப் பெரியார், தாம் செல்லும் ஊர்களில் வேண்டுகோள் விடுத்து வந்தார். பொதுப்பணித்துறையின் முதல் தலைமைப் பொறியாளர் (பொது நிர்வாகம்) என்ற பதவியில், முதல் தமிழராக, எஸ்.பி. நமசிவாயம் 11-1-72-ல் நியமிக்கப்பட்டார். 11-ந் தேதி முதல் புதுவை அரசின் நாட்டு வாழ்த்துப் பாடலாகப் புரட்சிக் கவிஞரின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே" என்னும் பாடல் இருக்குமென்றும்; அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஏதாவதொரு பாரதிதாசன் பாடல் இடம்பெற வேண்டுமென்றும் ஆளுநர் பி.டி. ஜாட்டியின் பேரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

9-1-72 அன்று பெரியார், திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், “கம்யூனிசம்" என்ற தலைப்பில் உறையூரில் பேசிய சொற்பெருக்கு, அற்புதமான கொள்கைப் பெருக்கு; கருத்துப் பெருக்கு; காவிரியின் ஆடிப்பெருக்கு:- “கம்யூனிசம் என்பதற்குத் தமிழில் பொதுவுடைமை என்பார்கள். இன்றைய தினம் உடைமை என்று கருதப்படுவதெல்லாம் தனித்தனி மனிதனுக்குச் சொந்தம். பொதுவுடைமை என்றால் எந்தச் சொத்தும் எந்த மனிதனுக்கும் சொந்தமல்ல; எல்லாம் சர்க்காருக்குச் சொந்தம். எல்லோரும் உழைப்பது; உழைப்பினால் வரும் பொருளை எல்லோரும் அனுபவிப்பது.

உதாரணமாக இந்த உறையூர் ஒரு பொதுவுடைமை நாடாக ஆகின்றது என்றால், உறையூர் மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தின் சொத்து எல்லாருக்கும் பொது என்பது போல், உழைப்பு எல்லாரும் செய்யவேண்டியது என்பது போல், வருவாயை எல்லாரும் சேர்ந்து அனுபவிப்பது என்பது போல், ஊரில் எல்லாமே பொதுவுடைமையாகிவிடுகிறது!

இதன் அடிப்படைத் தத்துவம் என்ன? மனிதன் கவலை உள்ளவனாகவே இருக்கிறான், பிரதமரானாலும், முதன் மந்திரியானாலும், நாட்டை ஆள்பவர்களுக்குப் பல பிரச்சினைகள்