பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

594

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


தருபவர்கள் பார்ப்பனப் பத்திரிகைக்காரர்களே ஆவார்கள்.

பொதுவாழ்வில் பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கம் குறையக் கண்டவுடன், உண்மையில் பெருமையும் கவுரவமும் உள்ளவர்களை ஒதுங்கும்படிச் செய்து, அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியவர்களையே பெரிதும் வேட்டையாடி விளம்பரம் கொடுத்துப் பொது ஒழுக்கத்தையே பாழாக்கினார்கள்.

கட்டுப்பாடும் சமாதானமும் அற்ற தன்மையை சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கிவிட்டு, ஜனநாயகத்தையும் உண்டாக்கிவிட்டால் - எந்தக் குணம், எந்தத் தன்மை கொண்ட மக்களின் ஆட்சிதானே நிலவும்? தொழிலாளர் தொல்லை, கூலிக்காரர் தொல்லை, இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், இந்த நாட்டில் இந்த இனம்தானே மெஜாரிட்டியாக உள்ளனர்.

இந்த நிலையில், சமதர்மம் ஜனநாயகம் என்றால், நாடும் மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஆகவே நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்று, சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்." இது பெரியார் 6-7-72 அன்றைய "விடுதலை"யில் தீட்டிய தலையங்கப் பகுதியாகும்.

இந்த ஆண்டு 15-7-72 அன்று பெரியார் - காமராஜ் படங்களுடன், " காமராஜ் அவர்களைக் கட்சிக் கண்கொண்டு பார்ப்பதில்லை. பார்ப்பனரல்லாதார் என்பதில் உள்ள தனிப்பற்று கொண்டு பார்க்க வேண்டும். பார்ப்பனர் எந்தக் கட்சியிலிருந்தாலும் கவலைப்படாமல், தங்கள் நலனில் மட்டும் அக்கறை காட்டுவது போல, நம்மவர்களுக்கும் வரவேண்டும்" என்ற செய்தி காமராஜர் பிறந்தநாளை யொட்டி "விடுதலை"யில் தரப்பட்டது.

“அரசாங்கத்தின் முக்கிய கவனத்துக்கு” என்று பெரியார் 17-7-72 அன்று எழுதிய தலையங்கம் கவலையோடு கூடியிருந்தது:- கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனீயம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தமிழ் நாடு அரசு உத்தேசித்துள்ளதாம். எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர்த்துக்கொள்ளத் தகுதியுடையவர் (Eligible for college course) என்று எழுதிக், கையெழுத்தும் செய்து கொடுத்து விட்டுக், காரியத்தில் மார்க்கு பார்த்து, திறமை பார்த்துப், புகுமுகப் பரிட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு போடுவதும், தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும், பார்ப்பனீயமா, அல்லவா?