பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



கடுமையான நிபந்தனைகள் இராமசாமியாருக்கு இவை. கண் முன் நாகம்மையார் தோன்றினார். அன்றாடம் பல்விளக்குவதும், குளிப்பதும் அவசியமானவை அல்ல, என்ற பிடிவாதக் கொள்கையுடைய தம் கணவரைப், பலவந்தமாய் இழுத்துச் சென்று, பல் துலக்கிக், குளிப்பாட்டி விடும் அம்மையாரின் அன்புப் பணியினை இங்கே யார் செய்ய முன் வருவார்? நடுக்கும் குளிரில் நாள் தவறாமல் நீராடுவதா? மடத்துச் சாமியார் விழித்துக்கொள்ளுமுன் எழுந்து, பட்டை பட்டையாக விபூதியினைக் குழைத்து மேனி எங்கும் தீட்டிக், குளித்துவிட்ட பாவனையில் மலர் பறித்து வருவார். இந்தக் கள்ளத்தனமும் ஒரு நாள் கண்டு பிடிக்கப்பட்டது. கையில் கிடைத்த வேலை கை நழுவிப் போயிற்று! கங்கைக் கரையில் கையேந்திச் சிலநாள் காலங் கழித்தார்! அங்கு கண்ட அநாச்சார, அவலக் காட்சிகள், பிண்டம் போட்டு இறந்தவர்க்குச் சிரார்த்தம் நடத்தும் பண்டாக்களின் ஈனத்தனமான எத்து வேலை மோசடிகள், ஒழுக்கக் கேடும், விபச்சாரமும், வழுக்கி விழுதலும், ஒரு பொருட்டாக மதியாமல், பார்ப்பன மாந்தர் -பெண்டிர் உட்பட, மது மாமிசம் அருந்தும் அயோக்கியத்தனங்கள் - இவை யாவும் காசி நகர் மீதே வெறுப்பினை உண்டாக்கிவிட்டன. இராமசாமி, அங்கிருந்து வேற்றூர் செல்ல விழைந்தார்!

செப்பாலடித்த சிறுகாசும் கைவசமில்லை; அப்பால் செல்வது எப்படியோ எனச் சிந்தித்த வண்ணம், இடுப்பில் கை வைத்தபோது, என்றோ மறைத்து எடுத்து வந்திருந்த மோதிரம் தட்டுப்பட்டது. அதனை விற்றுப் பணமாக்கிக் கொண்டு கிளம்பினார். எதிர்ப்பட்ட ஊர்களில் சிற்சில நாள் தங்கிச், சுற்றிப் பார்த்துக்கொண்டே, ஆந்திராவைச் சார்ந்த ஏலூரு என்னும் ஊரை வந்தடைந்தார். முன்னர் ஈரோட்டில் அலுவல் பார்த்த சுப்பிரமணிய பிள்ளை என்பார், ஏலூரில் இருந்து வந்தது இராமசாமியின் நினைவில் நின்றபடியால், அன்னாரின் இல்லத்தைத் தேடிக் கண்டுபிடித்து, நள்ளிரவில் அங்கு போய்ச் சேர்ந்தார். கவுபீன தாரியான சின்ன நாயக்கரை, அவர் அடையாளம் கண்டுகொள்ள அதிக நேரம் ஆயிற்று. குரல்தான் காட்டிக் கொடுத்தது; சான்று தந்தது. உள்ளம் நெகிழ்ந்த பிள்ளை அவர்கள், இராமசாமிக்கு வேட்டி சட்டை அணிவித்து, வேடத்தைக் களையச் செய்து, தம் இல்லத்திலேயே அன்புடன் இருத்திக் கொண்டார். இதற்கிடையில், இராமசாமியைக் காணாத பெற்றோர் என்ன பாடுபட்டனர்? எண்ணற்ற பொருட் செலவு; எங்கெங்கோ தேடி வர ஆள் செலவு; தந்திகள் கடிதங்கள் பறந்த வண்ணம் இருந்தன! நாயக்கர் குடும்பத்தில் இப்படியொரு நலிவா! வெங்கட்ட நாயக்கரும் கிருஷ்ணசாமியும் வெகு தூரம் தேடி நொந்து, அந்தோ இளவலை இழந்தோம் என வருந்தி வாடினர். இராமசாமிக்கு எல்லாவற்றிலும் நெருங்கிய