பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சிறப்புடனும் அன்புடனும் சிலை எழுப்பப்படுகிறது. வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!

15-8-1972 சுதந்திரதின வெள்ளி விழா, சென்னைக் கடற்கரையில் முதல்வர் கலைஞர் தலைமையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராம், பெரியார் வழியில் அண்ணாவும் கலைஞரும் ஆட்சிப் பொறுப்பின் வாயிலாகச் செய்து வரும் சாதி ஒழிப்புப் பணிகளைப் பெரிதும் பாராட்டினார். அன்று மாலை அவர் அரசினர் அம்பேத்கர் நினைவுக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், இந்தச் சுதந்திர நாள் பெரியாரின் உள்ளத்தில் எப்பேர்ப்பட்ட சிந்தனையைத் தந்தது:- என்னைப் பொறுத்தவரையில், நான் இதை, அடிமையும் மடமையும் ஒழுக்கக்கேடும் நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான, துக்கநாள் துவங்கிய 25-ம் ஆண்டு நாள் என்றுதான் கூறுவேன். இந்தியாவுக்கு என்றைக்குச் சுதந்தரம் வெளியிடப்பட்டதோ, அன்றைக்கே இதை நான் சொல்லிவிட்டேன்.

சுதந்தரம் என்று முதலில் விஷயம் வெளியானவுடன். உயர்திரு அண்ணா, அதைச் சுதந்திர நாள் என்று பாராட்டினார். காங்கிரஸ்காரர்கள் அதைத் துணித் தோரணங்களில், பெரிதாக எழுதி, அடியில் அண்ணாதுரை என்றும் எழுதி, தெருத் தெருவாகக் கட்டி வைத்தார்கள். பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் போல் பிரசுரித்தார்கள். அநேகமாக இந்தச் சம்பவம்தான் அண்ணாதுரைக்கும் நமக்கும் மாறுபாடு வெளியான சம்பவமாக இருக்கலாம்.

அது மாத்திரமல்லாமல், அடுத்த விஷயத்தை மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கூட்டத்தில் (பொள்ளாச்சி என ஞாபகம்) இது சுதந்தர நாள் என்று பேசினார் என்பதைக் கேள்விப்பட்டு, நான் கண்டித்தேன். அப்போது அதற்குப் பதிலளிக்க நாவலர் அவர்கள் “தலைவர் கருத்து இப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு முதலிலேயே தெரிவித்திருக்க வேண்டாமா? எங்களுக்கு எப்படித் தெரியும்” என்று சொன்னார்.

ஆகவே இது துக்க நாள், மனித சமுதாயத்திற்குக் கேடானநாள் என்பதை அப்போதே சொன்னேன். அது எப்படியோ இருக்கட்டும்; இன்று இந்த நாட்டில் ஓர் ஆட்சிக்கு இருக்கக்கூடாத ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, புரட்டு, பித்தலாட்டம், மானங்கெட்ட தனம், கட்சிமாறல், கட்சிக்குத் துரோகம், இழிதன்மையான சுயநலம், அபாண்டமாய்க் குறைகூறல் முதலிய கூடாஒழுக்கக் காரியங்கள் எந்தக் கட்சியில் யாரிடம் இல்லாமல் இருக்கின்றன? இப்படிப்பட்ட காரியத்திற்காக யார் வெட்கப்படுகிறார்கள்?

முதலாவதாக, அயோக்கியத் தனத்துக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். இந்தத் தேசத்தில் எவன் ஒருவன் தன் நாட்டுக்குச் சர்வ