பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

602

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வழங்கி வந்தது, இரக்கத்தினடிப்படையில்! அன்பில் தர்மலிங்கம் 26-8-72 முதல் மீண்டும் வேளாண்மைத்துறை அமைச்சராகவே நியமிக்கப் பெற்றார். அன்று மாலையே பெரியாரைச் சந்தித்து வணங்கினார். ஆனால் 2-9-72 அன்றுதான் இவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள 6 ஏக்கர் புஞ்சை நிலத்தில் தந்தை பெரியார் குடியிருப்பு என்ற பெயரில் சிற்றூர் உருவாகி வருவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பிரசுரமாகியிருந்தது. இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் பரிசாக, வீடு வீடாகச் சென்று தோழர்கள் எளிமையாக வழங்கும் பொருட்டுப், பத்துகாசு விலையில் “உயர் எண்ணங்கள்” என்ற அழகிய சிறிய நூல் பெரியாரின் சிந்தனைகளைத் தாங்கி, வெளியிடப்பட்டு, லட்சக்கணக்கில் விற்பனையை எட்டியது. (1½ லட்சம் பிரதிகள்) இவ்வாண்டு “விடுதலை” மலர் விலை ரூ.2-50; பக்கம் 200.

கோயில் திரைமறைவில் பக்தியின் பெயரால் 12,750 ஏக்கரா ஏப்பம். கோயில் பெருச்சாளிகளின் மர்மம் அம்பலம். தமிழ்நாடு அரசு நடத்திய விசாரணையின் விளைவு - என “விடுதலை”யில் முதல் பக்கத் தலைப்புச் செய்தி 1-9-72 அன்று வெளியாயிற்று. தூத்துக்குடியில் 5-ந் தேதி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலையைப், பிரதமர் இந்திரா திறந்து வைத்துத் துறைமுகத்துக்கும் அவர் பெயரே சூட்டப்படும் என்றார். 6-9-72 அன்று திருச்சியில் திருவாளர் டி.எம். நாராயணசாமிப் பிள்ளையின் 80-வது வயது பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அன்னாரின் கல்வித் தொண்டுகளைச் சிறப்பித்துக் கூறினார் பெரியார். 10-ந் தேதி தர்மபுரியில் பேசும்போது பெரியார் “டில்லி ஆட்சியின் அதிகார பலத்தைக் கொண்டு எப்படியாவது தமிழக அரசை டிஸ்மிஸ் செய்துவிட வேண்டும் என்று சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்” என்று தீர்க்கதரிசனமான செய்தி ஒன்றைக் கூறினார். சேலம் ஊர்வல வழக்கு, மாவட்ட நீதிபதி சாமிக்கண்ணு அவர்கள் முன்னிலையில், ரிவிஷன் மனுவாகச் செய்யப்பட்டபோது, அதனைத் தள்ளுபடி செய்தார், 12-9-72 அன்று.

இந்த ஆண்டு பெரியார் தமது 94-வது பிறந்த நாளன்று திருச்சியிலிருந்தார். சிந்தனையாளர் கழகச்சார்பில் நடந்த விழாவில், அமைச்சர்கள் அன்பில் தர்மலிங்கம், எஸ். ராமச்சந்திரன், கே. ராஜாராம், துணைவேந்தர் சுந்தரவடிவேலு ஆகியோர் பங்குபெற்றனர். பெரியாருக்கு அன்பளிப்பாக வெள்ளிவாளும், வெள்ளித்தட்டும் வழங்கப்பட்டன. “பார்ப்பனர்கள் எப்படி சங்கராச்சாரியாரைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டி வருவதால், அவர்கள் சமுதாயத்துக்கே லாபம் ஏற்படுகிறதோ, அதேபோல, நீங்கள் என்னைப் பாராட்டுவதால், எனக்கொன்றும் லாபமில்லா விட்டாலும், தமது சமுதாயத்-