பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

603


துக்கு நிச்சயம் நன்மை ஏற்படும் என்பதால் செய்கிறீர்கள். இல்லாவிட்டால் கொஞ்சம் அவர்கள் பக்கம் தான் சாய்ந்தால், வெகு சுலபமாகப் பகவான் ராமசாமி அல்லது மகான் ராமசாமி ஆகிவிடுவேனே” என்று அந்த விழாவில் பெரியார் குறிப்பிட்டார்.

“விடுதலை” பெரியார் 94-வது பிறந்தநாள் விழா மலரில் இரண்டொரு கட்டுரைகள் பெரியார் தீட்டியிருந்தார். பிறந்த நாள் செய்தி போலத் தந்திருந்தது - கடந்த 93 ஆண்டுகளில், நான் பிறந்து, 1,116 மாதங்கள், 34,045 நாட்கள், பிறைகள் 1,635 ஏற்பட்டு மறைந்து விட்டன. இனி எத்தனை காலத்துக்கு நான் வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானந்தான். வளர்ச்சி காண்பது முடியாது காரியமாகும்.

தெய்வம் என்பதாக எதுவும் இல்லை; மனிதத்தன்மைக்கு மேற்பட்டதாக தெய்வசக்தி - தெய்வீகத்தன்மை என்பதாக எதுவுமில்லை என்று திண்ணமாய்க் கருதி, உறுதியான பணி ஆற்றி வருகின்றேன். இதனால் யாதொரு குறையும், மனச் சங்கடமும், அதிருப்தியும் இந்த 93 ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்டதில்லை என்பதோடு, நாட்டுக்கும், மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமேயில்லை என்று கருதி மக்கள் நிம்மதியுடன் இழி நிலையைத் துன்பங்களை ஏற்றுக்கொண்டு இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய்ச் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும் இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதித் துணிந்து, கடவுளையும் மதத்தையும் சாஸ்திரங்களையும் முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக் கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களையும், அறிவையும் உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே, இம்மாற்றங்களுக்குக் காரணமாயிற்று.

எனவே நான் 93 ஆண்டுகள் வாழ்ந்ததை வீண் வாழ்வு என்று கருதவில்லை. என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகிவிட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். காண் காது சரியாக இல்லை. கால்கள் நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம்.

இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்!

ஏதாவது பொல்லாத வாய்ப்பால், இப்போதைய இந்தத் தி.மு.க.