பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

604

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சி வரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளைச் சிந்தித்தால் பெரும்பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.

அடுத்த ஒரு கட்டுரையில் பெரியார், இன்றையச் சுதந்திர இந்தியாவில் நடைபெறும் சில அட்டூழியங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:- “அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது கெட்டதிலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக்கிறோம் (from bad to worse). இதனால் வரவர நம் நாட்டுப் பெண்களும், மாணவர்களும் தவறான காரியங்களால் சூழ்ந்து தழுவிக்கொள்ளப்படுவார்கள் போல் தெரிகிறது.

ஒரு கல்லுருவத்திற்கும், அயோக்கியத்தனங்களைப் பரப்பும் ஸ்தாபனமான ஒரு கோயிலுக்கும், ஒரு மடத்திற்கும், ஒரு சபையாருக்கும், ஒரு சாமியாருக்கும், ஒரு சங்கராச்சாரியாருக்கும் ஒரு கோடி ரூபாய் வருமானமிருந்தாலும், சொத்து இருந்தாலும், வரவு - செலவு இருந்தாலும் அனுமதிக்க வேண்டியது. கணக்கு வரி கேட்கக்கூடாது. ஆனால், உழைத்துப் பாடுபட்டு, திருடாமல், ஏமாற்றாமல், தேடிய சொத்துக்களுக்கு அளவு - அதாவது ஒருவனுக்கு இவ்வளவுதான் உரிமை - என்பது ஆட்சிக் கொள்கைத் திட்டம் என்றால், இந்திய ஆட்சியின் தன்மை எப்படிப்பட்டது? முன்னவர் செல்வம் எப்படி நாசமாகிறது? யாருக்குப் பயன்படுகிறது? பின்னவர் செல்வம் யாருக்குப் பயன்படுகிறது?

கார்த்திகை என்கிறான்; குடம் குடமாய்ப் பீப்பாய் பீப்பாயாக நெய் வெண்ணெய் எண்ணெய் பால் பாழாகிறது. இலட்சதீபம் என்கிறான்; அபிஷேகம் என்கிறான்; எல்லாம் குடம் குடமாக ஜலதாரைக்குப் போகிறது. கேள்வி கேட்பாரே கிடையாது. இந்தப் பார்ப்பனர் வாழும் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட பழக்கமோ, வழக்கமோ, சர்க்கார் அனுமதியோ கிடையாதே!

மேலும், தேசத்தில் உள்ள 50 கோடி மக்கள் ஒன்று சேராதபடி, 16 மாகாணங்களாகப் பிரித்து, பல நிபந்தனைகளைக் கட்டாயச் சட்டமாக ஆக்கிக்கொண்டான். இது உலகம் உள்ளவரை நிரந்தரமாகப் பிரிந்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தமும், பிரிந்து கொள்ள விரும்புகிறவனுக்குப் பிரதிநிதித்துவ உரிமை இல்லை, கிரிமினல் தண்டனை என்றும் ஆக்கிக்கொண்டு, மேல் சாதியானுடைய சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டு, பரம்பரைச் சொத்து போல், அனுபவித்து வரும் ஓர் ஆட்சியின் கீழ் நாமிருக்கின்றோம். இதை அடிமை ஆட்சி என்றும் சொல்ல