பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

621


பெருமை இராஜாஜிக்குத் தான் உண்டு. மேலும், கலப்புத் திருமணத்தைத் துணிந்து முதலில் ஆதரித்தவரும் இவரே. ருக்மணிதேவி அருண்டேல் திருமணத்தைக் கட்டுப்பாடாகப பார்ப்பன சமுதாயமே- ஏன் சத்தியமூர்த்தி அய்யர், ரெங்கசாமி அய்யங்கார், கஸ்தூரி ரெங்க அய்யங்கார் எல்லாருமே எதிர்த்தபோதும், துணிந்து அதை ஆதரித்ததோடு, தமது மகளையும் கலப்புத் திருமணமாக, காந்தியார் மகனுக்குக் கொடுத்தவர் இராஜாஜி.

என்னை முழுக்க முழுக்க சமுதாயத் தொண்டனாக ஆக்கி, காங்கிரசில் ஈடுபடுத்தித், “தலைவர் நாய்க்கர்” என்று தாமே அழைத்து, பிறரையும் அழைக்கச் செய்த பெருமையும் அவரையே சாரும். நாங்கள் நாலைந்து ஆண்டுகள் இரண்டறக் கலந்து, நண்பர்களாக இருந்தோம்.

இராஜாஜி என்னோடு உள்ளவரை ஒரு பகுத்தறிவுவாதியாகவே இருந்தார். மற்றும் அவர் பொதுவுடைமைக் கருத்தையும் ஆதரித்தவர்.

வக்கீல் தொழிலிலும் “கோர்ட்டார் அவர்களே! எனது கட்சிக்காரரை நிரபராதி என்று சொல்ல நான் இங்கு வரவில்லை , இவர் குற்றவாளி என்று ஒரு முடிவு செய்ய வேண்டிய அளவுக்குச் சட்டப் படியான ஆதாரங்கள் இல்லை!” என்றுதான் சொல்லுவார். காந்தியை அடிக்கடி திணற வைத்து விடுவார். இதனாலேயே காந்தியாரும், இராஜாஜி அவர்களின் ஆமோதிப்பைப் பெற்றே எந்தக் கருத்தையும் வெளியிடுவார்.

இந்தி விஷயத்தில், பிற்காலத்தில், அவருக்கு அது கட்டாயப் படுத்தத் தக்கதல்ல என்கின்ற கருத்து பலமாக இருந்தது. இராஜாஜி அவர்களும் என்னைப்போலவே ஸ்தல சுய ஆட்சி என்பது தேவை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்.

நம்நாட்டு அரசியல் வகுப்பு உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியலாக ஆகிவிட்டதால், அரசியல் காரணமாக வகுப்புகளுக்குக் கேடு வரக்கூடாது என்ற கருத்தால் - நம்முடைய சில கருத்துகள், காரியங்கள் இராஜாஜி அவர்களது ஆதரவுக்கு உரியன அல்லவாக இருக்கலாம் என்றாலும், பொதுவில் இராஜாஜி அவர்களை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் பரிகாரம் செய்ய முடியாத இழப்பே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”