பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

620

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


செய்கின்றார்களே? இவர்களுக்கு மட்டும் ஏது பணம்? இதை யாராவது கேட்க வேண்டாமா?" என்று, தாமே கேட்டு விட்டார்.

37.12.73 மாலை இராஜாஜியின் சவ ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டபோது, பெரியாரும் வேனில் பின் தொடர்ந்து சென்றார். எம்.ஜி.ஆரும் ஊர்வலத்தில் நடந்து வந்தார். அவரது ரசிகர்கள் சவ ஊர்வலம் என்பதை மறந்து, கைதட்டி, விசிலடித்து, ஆரவாரம் செய்யக் கண்டு, அவர் தமது காரில் ஏறிச் சென்றுவிட்டார், கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் தமது அறுபதாண்டு நண்பரின் சிதைக்குத் தீயிடப்பட்டபோது, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பெரியார், கசிந்து கண்ணீர் சிந்திய காட்சி, கண்டோர் நெஞ்சத்தைப் பிழிந்து விட்டது!

26.12.72 'விடுதலை'யின் தலையங்கம் இராஜாஜியின் மறைவுக்காகப் பெரியாரால் தீட்டப் பெற்றது என்பதைத் சொல்லவும் வேண்டுமா?... “நண்பர் இராஜாஜி அவர்கள் முடிவெய்திய நிகழ்ச்சி எல்லையற்ற துக்கத்துக்குரிய நிகழ்ச்சியாகும். சம்பிரதாயத்திற்கல்ல. உண்மையாகவே சொல்லுகிறேன்; இராஜாஜி அவர்கள் ஒப்பற்றவர். இணையற்றவருமாவார். கொள்கைக்காகவே வாழ்ந்து, கொள்கைக் காகவே தொண்டாற்றி, முடிவெய்திய பெரியார் ஆவார். அவரது இழப்பு பரிகாரம் செய்ய முடியாது இழப்பாகும்.

தமிழ் நாட்டில் ஒப்பிலாமணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி, தமது 95வது வயதில் முடிவெய்தி மறைந்து விட்டார். அவரது பெருமைக்கு ஓர் எடுத்துக் காட்டு தெரிவிக்க வேண்டுமானால், இராஜாஜி இல்லாது இருந்தால் "மகாத்மா காந்தி" யே இருந்திருக்க மாட்டார். அது மாத்திரமல்ல, இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது.

தமிழ் நாட்டில் பார்ப்பனருக்கு எதிராகத் தோன்றிய ஓர் எரிமலையை, மகாத்மா காந்தி என்னும் ஒரு புயல் மழையைக் கொண்டு தான் அவித்து, பார்ப்பனரை இருக்கச் செய்தார். 40 ஆண்டுக்கு உட்பட்ட மக்களுக்குத் தெரியாத சேதியாகும் இது. இராஜாஜி அவர்கள் 1910ல் பார்ப்பனரல்லாதாருடன் சமபந்தி போஜனம் செய்தார். 1915லிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்துவார்; அவரால், காங்கிரசில் எல்லாப் பார்ப்பனர்களும், காந்தியாரும், சமபந்தி போஜனம் அருந்தும்படி ஆயிற்று. நான் அறிய, திராவிட நாட்டில் இவரால்தான் முதலில் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மை ஏற்பட்டது.

தீவிர தேசபக்தர் மகாதியாகி என்று சொல்லப்பட்ட வ.வே.சு. அய்யர் வர்ணாசிரமப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், தான் மாத்திரமல்லாமல் அநேகப் பார்ப்பனரையும் துணிந்து யார் வீட்டிலும் உணவு அருந்தக்கூடிய சமுதாயச் சீர்திருத்தம் செய்த