பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

626

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சரிதான், நமக்கென்ன? என்று இருந்து விடுகிறார்கள். வீட்டிலிருந்து தொந்தரவு தராமலிருந்தால் சரிதான் - என்று நினைக்கின்ற பெற்றோர்களுக்குப் பொறுப்பும் இல்லை; கவலையும் இருப்பதில்லை. உத்தியோகம் பார்ப்பதற்குத்தான் கல்வி என்ற நிலைமையை மாற்றித் தொழிலில் அக்கறை ஏற்பட, நிறையத் தொழிற் பயிற்சிப் பள்ளிகள் தேவை” என்று பெரியார் எழுதியிருந்தார். மலேசியாவில் கூட சு.ம. திருமணங்கள் செல்லும் என்றும், தலைவர் வைத்துத் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதித்ததைப் பெரியார் பாராட்டினார். 10 - ந் தேதி அண்ணாமலை நகரில் பேசும் போது “தி.மு.க. ஊழல் என்று ஊரெல்லாம் பேசுகிறார்களே - நான் கேட்கிறேன் - காந்தி, நேரு இராஜாஜி, காமராஜர், இந்திராகாந்தி இவர்களில் ஊழலில் சம்பந்தப்படாதவர் யார்? சொல்ல முடியுமா?” என்று வினாத் தொடுத்தார் பெரியார்.

கோபிச் செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பெரியார் 1-ந் தேதி பேசும்போது “இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனியாகப் பிரிந்து விட வேண்டும் என்கிற பிரிவினை உணர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா ஒரே நாடு என்று சொல்வதே பெரியதொரு புரட்டாகும். அதே போலத்தான் கடவுள் என்றால் காரித்துப்பு, என்று சிறுவர்களுக்கும் சொல்லித் தரவேண்டும்.” எனக் கருத்துரைத்தார். அவ்வாறே இராஜபாளையத்தில் “தசாவதாரம் என்கிறார்கள். 64 திருவிளையாடலுக்கும் அவதாரம் எடுத்தான் என்கிறார்கள். இப்படி ஆயிரக்கணக்காக அப்போது அவதாரம் எடுத்த கடவுள், இன்று செருப்பால் அடி வாங்கியும் வரக் கானோமே!” என்றார்.

பெரியாருடைய சுற்றுப்பயணங்கள் தடையின்றி நடைபெற வசதியாக அவருக்கு ஒரு வேன் வழங்க வேண்டுமென முயன்று, எஸ் குருசாமி, 1955 ல் ஒன்று ஏற்பாடு செய்தார். பின்னர் வேறொன்று 1961ல் சிதம்பரத்தில் வழங்கப்பட்டது. அந்த வேன் மூன்று முறை ரிப்பேராகி விட்டது. 1968 ல் கரூரில் அளித்த வேனும் சரியாக இல்லை என்று ஜி.டி. நாயுடுவிடம் தரப்பட்டது. இப்போது புதிதாக ஒன்று ஏற்பாடு செய்து, வேனில் அமர்ந்தபடியே அய்யா அவர்கள் பேசுமாறு வசதிகள் செய்ய வேண்டும். தோழர்கள், மாவட்டக் பொறுப்பாளர்கள், நன்கொடை திரட்டி உதவ வேண்டும். என்பதாக வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். தஞ்சை கா.மா குப்புசாமி 25.1.73 அன்று, 2,000 ரூபாய் அன்பளிப்பாக வழங்கினார்; அதன் பின்னர் எல்லா ஊர்களிலும் போட்டி போட்டுக் கொண்டு கார் நிதி வழங்கிட முன் வந்தார்.

27.12.72 அன்று சென்னை “கலைமகள்” இதழின் சார்பில் திரு.பாணன் என்பவர் பெரியாரைப் பேட்டி கண்டார். அதில் ஓர் எழுத்துகூடக் குறைக்காமல் பிப்ரவரி 1973 இதழில்